மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்பு - சீர்செய்யும் பணிகள் ஆரம்பம்
ரயில் பாதையை சீர்செய்யும் பணிகளில் ரயில் நிலைய ஊழியர்களும், தியத்தலாவ இராணுவத்தினரும் ஈடுப்பட்டுள்ளனர்.

ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட 155 ¼ எனும் மைல்கல் பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளன.
ரயில் பாதையை சீர்செய்யும் பணிகளில் ரயில் நிலைய ஊழியர்களும், தியத்தலாவ இராணுவத்தினரும் ஈடுப்பட்டுள்ளனர்.
மண்சரிவு காரணமாக மலையக ரயில் பாதையின் ஊடான சேவைகள் தாமதமாகலாம் என ரயில் நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு நேர தபால் ரயில் ஹப்புத்தளையில் நிறுத்தப்பட்டது.
இதேவேளை, ரயில் பாதை தடைப்பட்டுள்ளதால் உடரட மெனிக்கே ரயிலும், பொடி மெனிகே ரயிலும் இன்று காலதாமதமாக இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, காலை 05.45 மணிக்கு பதுளையில் இருந்து கோட்டை வரை இயக்கப்பட வேண்டிய உடரட மெனிக்கே ரயில் இது வரை புறப்படாமல் உள்ளது.
அத்துடன், காலை 08.30 மணிக்கு கொழும்பு நோக்கிச் செல்லவிருந்த பொடி மெனிகே ரயிலும் சில மணித்தியாலங்கள் தாமதமாகப் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரிய மண்சரிவு என்பதன் காரணமாக சீர்செய்யும் பணிகளில் தாமதம் ஏற்படுவதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.
(க.கிஷாந்தன்)