2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம் – பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள்

இம்முறை சாதாரண தரப் பரீட்சையின் நேர அட்டவணை தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே பரீட்சார்த்திகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பெப்ரவரி 17, 2026 - 10:14
2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம் – பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள்

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, இன்று செவ்வாய்க்கிழமை (17) நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ளது. இதற்காக 3,545 பரீட்சை மத்திய நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், 451,463 பரீட்சார்த்திகள் இம்முறை பரீட்சையில் பங்கேற்கின்றனர் எனப் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை சாதாரண தரப் பரீட்சையின் நேர அட்டவணை தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே பரீட்சார்த்திகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள நேர அட்டவணையை மட்டுமே பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இம்முறை பரீட்சையின் ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது மற்றும் எட்டாவது நாட்களில் பாட ஒழுங்கில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், சரியான நேர அட்டவணையை உறுதிப்படுத்திக் கொண்டு பரீட்சைக்கு தயாராகுமாறும் அவர் வலியுறுத்தினார்.

பரீட்சை இன்று காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில், ஒவ்வொரு பரீட்சை தொடங்குவதற்கும் குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்னரே பரீட்சை நிலையங்களுக்கு வருகை தர வேண்டும். அதேபோன்று, பிற்பகல் வேளைக்கான பரீட்சை 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதால், பரீட்சார்த்திகள் பகல் 12.30 மணியளவில் மத்திய நிலையங்களில் சமூகமளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை மண்டபத்திற்குள் கையடக்கத் தொலைபேசிகள், புளூடூத் சாதனங்கள், ஸ்மார்ட் கடிகாரங்கள், குறிப்புகள் மற்றும் எந்தவித ஆவணங்களையும் கொண்டு செல்வது கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், பரீட்சை முடியும் வரை பரீட்சார்த்திகள் தங்களின் ஆள் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். பாடசாலை பரீட்சார்த்திகள் தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டைப் பயன்படுத்தலாம். தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தேவைப்பட்டால், இரண்டு புகைப்படங்களுடன் கிராம உத்தியோகத்தர் சான்றளித்த தற்காலிக அடையாள அட்டையை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வினாத்தாளில் உள்ள அறிவுறுத்தல்களை நன்கு வாசித்து, அனைத்துப் பகுதிகளும் தமக்குக் கிடைத்துள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தி, பரீட்சை சுட்டெண்ணைத் துல்லியமாகக் குறிப்பிட்டு விடையளிக்க வேண்டும். கையெழுத்து தெளிவாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் திப்பெக்ஸ் பயன்படுத்தக் கூடாது. தவறு ஏற்பட்டால், அதை ஒரு கோட்டினால் வெட்டி மீண்டும் சரியாக எழுத வேண்டும். விடைத்தாள்களை நூலால் கட்டி சரியாக இணைக்க வேண்டும்.

பரீட்சை மண்டபத்தில் ஒழுக்க விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். முகம் தெளிவாக அடையாளம் காணக்கூடிய வகையில் வருகை தருவதுடன், ஏனைய பரீட்சார்த்திகளுக்கு இடையூறு ஏற்படும் எந்தவித நடத்தை முறைகளையும் தவிர்க்க வேண்டும். இத்தகைய ஒழுங்கீன நடவடிக்கைகள் இடம்பெற்றால், பரீட்சை பெறுபேறுகள் இரத்துச் செய்யப்படலாம் எனப் பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்சரித்துள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!