தோட்ட தொழிலாளர்களின் கொடுப்பனவை வங்கி கணக்குக்கு வரவு வைக்க அரசாங்கம் அதிரடி தீர்மானம்

தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில், 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தில் முக்கியமான நிவாரணங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

ஜனவரி 20, 2026 - 13:59
தோட்ட தொழிலாளர்களின் கொடுப்பனவை வங்கி கணக்குக்கு வரவு வைக்க அரசாங்கம் அதிரடி தீர்மானம்

தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில், 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தில் முக்கியமான நிவாரணங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. பெருந்தோட்ட தொழிலாளர்களின் தொழிலுக்கேற்ற நியாயமான ஊதியத்தை உறுதி செய்வதற்காக, அவர்களின் நாளாந்த ஆகக்குறைந்த சம்பளம் ரூ.1,550 ஆக உயர்த்துவதற்கும், வருகைக்கான நாளாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவாக ரூ.200 வழங்குவதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் உள்ள ஜனாதிபதி, 2026 வரவுசெலவு திட்டத்தில் முன்வைத்துள்ளார்.

இந்த முன்மொழிவுகளை அமுல்படுத்துவதற்காக, 2026 ஆண்டு வரவுசெலவு திட்டத்தின் கீழ் ரூ.5,000 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில், அரசு செலுத்தவுள்ள ஊக்குவிப்பு கொடுப்பனவு 2026 ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், முதற்கட்டமாக ஆறு மாத காலத்திற்கு பெருந்தோட்டக் கம்பனிகள் ஊடாக வழங்கப்பட உள்ளது.

அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு, இந்த ஊக்குவிப்பு கொடுப்பனவை தோட்ட தொழிலாளர்களின் தனிப்பட்ட வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கும் முறைமை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு ஒருங்கிணைத்து செயல்படுத்த உள்ளது.

மேற்குறித்த முறைமையின் கீழ் தோட்ட தொழிலாளர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்குவதற்காக, தொழில் அமைச்சர் மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இதன் மூலம் தோட்ட தொழிலாளர்களின் வருமானம் உயர்ந்து, அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் சமூக நலன் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!