ஈரானிய ‘ஷாஹெட்’ ட்ரோன்களை எதிர்கொள்ள உக்ரேனின் உதவியை நாடிய அமெரிக்கா – உதவ உக்ரேன் தயார்!
ஈரானின் ‘ஷாஹெட்’ (Shahed) ரக தற்கொலைத் தாக்குதல் ட்ரோன்களை எதிர்கொள்வதற்கான விசேட இராணுவ ஒத்துழைப்பை வழங்குமாறு அமெரிக்கா, உக்ரேனிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக உக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ‘X’ (முன்னர் ட்விட்டர்) சமூக வலைத்தளப் பதிவில் கருத்து வெளியிட்ட அவர், ஈரானிய ஷாஹெட் ட்ரோன்களை கையாள்வதில் “குறிப்பிட்ட ஆதரவை” வழங்குமாறு அமெரிக்கா கேட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தேவையான பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் போரின் போது, ஈரானில் தயாரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஷாஹெட் ட்ரோன்களை உக்ரேன் எதிர்கொண்டுள்ளது. அவற்றை குறைந்த செலவில் கண்டறிந்து தடுக்கவும் அழிக்கவும் உக்ரேனிய இராணுவம் முக்கிய அனுபவத்தைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் முன்னேற்றமான ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்புகளை கொண்டிருந்தாலும், ஈரானிய ட்ரோன் தொழில்நுட்பத்தை எதிர்கொள்வதில் உக்ரேனின் நேரடி போர்க் கள அனுபவம் தற்போது அமெரிக்காவிற்கு தேவையாகியுள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தனது பதிவில் உக்ரேனின் நிலைப்பாட்டை விளக்கிய செலென்ஸ்கி, “எமது நாட்டின் பாதுகாப்பிற்கும் எமது மக்களின் உயிரைக் காக்கவும் உதவி செய்த பங்காளி நாடுகளுக்கு உக்ரேன் எப்போதும் தனது ஆதரவை வழங்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்சூழல் குறித்து உக்ரேன் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையில் தினசரி ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, ஈரானின் இராணுவ உபகரணங்கள் ரஷ்யாவிற்கும் வழங்கப்படுவதால், அவற்றை எதிர்கொள்வதற்கான தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வது இரு நாடுகளுக்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது.