கண்டி – கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைக்கு வர்த்தக பெறுமதி இல்லை
லெப்ரடோரைட் கனியம் ஒரு வகையான அரை-பெறுமதி வாய்ந்த இரத்தினக்கல் பாறையாக வகைப்படுத்தப்படுவதாகவும், இருப்பினும் குறித்த பாறை வணிக ரீதியாக உயர்ந்த பெறுமதி கொண்டதாக இல்லை என்றும் அந்த அதிகார சபை தெளிவுபடுத்தியுள்ளது.
கண்டி – கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைக்கு குறிப்பிடத்தக்க வர்த்தக அல்லது சந்தை பெறுமதி (commercial or market value) இல்லை என தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், அந்தப் பாறையின் தாய்ப் பாறைக்குள் “லெப்ரடோரைட்” (Labradorite) எனப்படும் கனியத்தின் சிறிய அளவு மட்டுமே படிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெப்ரடோரைட் கனியம் ஒரு வகையான அரை-பெறுமதி வாய்ந்த இரத்தினக்கல் பாறையாக வகைப்படுத்தப்படுவதாகவும், இருப்பினும் குறித்த பாறை வணிக ரீதியாக உயர்ந்த பெறுமதி கொண்டதாக இல்லை என்றும் அந்த அதிகார சபை தெளிவுபடுத்தியுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்னர், கண்டி மாவட்டத்தின் கலஹா பகுதியில், தெல்தோட்டை தோட்டத்திலுள்ள கல்லந்தென்ன ஸ்ரீ முத்து மாரி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இருந்த கருங்கற்பாறை ஒன்றில் நீல நிற இரத்தினக்கல் இருப்பதாக செய்திகள் வெளியானன. அதனைத் தொடர்ந்து, நேற்றிரவு (21) தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது, அந்தப் பாறையிலிருந்து மூன்று மாதிரித் துண்டுகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அந்த பரிசோதனைகளின் அடிப்படையிலேயே, பாறைக்கு அதிக வர்த்தக அல்லது சந்தை பெறுமதி இல்லை என்ற முடிவுடன் மேற்படி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.