ஒன்பது வளைவு பாலத்திற்கு மின் விளக்கு அமைக்கும் திட்டத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்
தெமோதரை ஒன்பது வளைவு பாலத்தில் நடைபெற இருந்த மின் விளக்கு திறப்பு விழா காலவரையற்ற முறையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியம் அறிவித்துள்ளது.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் புகழ்பெற்ற சுற்றுலா தலமான தெமோதரை ஒன்பது வளைவு பாலத்தில் நடைபெற இருந்த மின் விளக்கு திறப்பு விழா காலவரையற்ற முறையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியம் அறிவித்துள்ளது.
திட்டத்திற்கான மின்சார இணைப்பை தனியார் நிலத்தின் வழியாகப் பெறுவது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையால் இத்தாமதம் ஏற்பட்டதாக, மத்திய கலாசார நிதிய பணிப்பாளர் நாயகர் கலாநிதி நிலன் கூரே தெரிவித்துள்ளார்.
பாலம் மற்றும் அதன் சூழலுக்கு மின் விளக்குகளை வழங்குவதற்காக நிறுவப்பட்ட மின்மாற்றிக்கு (Transformer) மின்சாரம் வழங்க வேண்டிய கேபிள்களை தமது நிலம் வழியாக அமைப்பதற்கு நில உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்ததால், திட்ட முன்னேற்றம் பாதிக்கப்பட்டுள்ளது.
மின்சாரத்தைப் பெறுவதற்கான மாற்று வழிமுறைகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன என்றாலும், அவை தொழில்நுட்ப ரீதியாக சிக்கலானதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த மாதத்திலேயே திட்டம் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய திறப்பு திகதி குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
ஒன்பது வளைவு பாலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை சுற்றுலா வலயமாக மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய இலக்காகும். இது மத்திய கலாசார நிதியமும் தொடருந்து திணைக்களமும் இணைந்து செயல்படுத்தும் கூட்டு முயற்சி ஆகும்.