திருகோணமலையில் மொழி மூலமான நல்லிணக்கம்: ஓர் அனுபவப் பகிர்வு

தமிழ் பேசும் ஊடகர்களுக்கு சிங்கள மொழி கற்கையும், சிங்களம் பேசுவோர்களுக்கு தமிழ் மொழி கற்கையும் நடத்தப்பட்டுள்ளது. குறித்த பாடநெறிகளை திருகோணமலையில் உள்ள எழுத்தாணி அமைப்பு முற்று முழுதாக இலவசமாக வழங்கியுள்ளது. 

Aug 24, 2023 - 13:08
திருகோணமலையில் மொழி மூலமான நல்லிணக்கம்: ஓர் அனுபவப் பகிர்வு

திருகோணமலை மாவட்டத்தில் மூவினங்களை கொண்ட மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். ஊடகவியலாளர்கள், ஊடக ஆர்வலர்களுக்கான மொழி கற்கை நெறி ஆரம்பிக்கப்பட்டு, பரஸ்பர ரீதியான சமூக நல்லிணக்கப் பயணமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் பேசும் ஊடகர்களுக்கு சிங்கள மொழி கற்கையும், சிங்களம் பேசுவோர்களுக்கு தமிழ் மொழி கற்கையும் நடத்தப்பட்டுள்ளது. குறித்த பாடநெறிகளை திருகோணமலையில் உள்ள எழுத்தாணி அமைப்பு முற்று முழுதாக இலவசமாக வழங்கியுள்ளது. 

இதன்மூலம் இப்பயிற்சியை 50 பேர்கள் 150 மணித்தியாலங்கள் கொண்ட பாடநெறியாக தொடரப்பட்டுள்ளது. இதன்மூலம் சமாதான நல்லிணக்க சக வாழ்வு உறுதிப்படுத்தப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் ஒரு கட்டமாக சிங்கள மொழி பேசுவோர் தமிழ் பேசும் வீட்டுக்கு ஒரு நல்லிணக்க பயணம் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறான பாடநெறி மூலம் சக வாழ்வினை ஏற்படுத்தும் நோக்கில் கண்டிக்கு ஒரு நாள் களவிஜயம் மேற்கொள்ளப்பட்டு, அங்குள்ள தமிழ் சிங்கள மொழி ஊடகர்களை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டன. 

இவ்வாறான பாடநெறி மூலம் புரிந்துணர்வினை மேம்படுத்தவும் இன, மத கலாசார பண்புகளை புரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் கிட்டியது. 

தமிழ் பேசும் ஊடகன் ஒரு சிங்கள மொழி சகோதரியின் வீட்டுக்கு இப் பாடநெறி மூலமாக களவிஜயம் மேற்கொண்டு இவ்வாறு அதனை பகிர்ந்து கொண்டார், "இந்த பாடநெறிக்கு வரும் முன் சிங்கள மொழி பேசவோ எழுதவோ தெரியாது. தற்போது ஓரளவேனும் பேச கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதன்மூலம் சிங்கள சகோதரியின் வீட்டுக்கு சென்ற வேளையில் அவர் என்னை மிகவும் ஆதரித்ததுடன், அவர்களது பௌத்த மதம், கலாசாரம் போன்றனவற்றை அறியக்கிடைத்ததுடன், முதற் தடவை தான் இவ்வாறு அவர்களது வீட்டுக்கு சென்று விருந்துபசாரங்களிலும் ஈடுபட்டேன். மிக்க சந்தோசமான இந்தப் பயணம் ஒரு விசேடமான அனுபவத்தை தந்துள்ளது. நான் முஸ்லிமாக இருந்தாலும் அவர்களது பாரம்பரிய உணவு முறைகள் போன்றனவும் கற்க கூடிய வாய்ப்பும் கிட்டியது. அவர்களது பௌத்த விகாரைக்கு சென்றதுடன், அவர்களது வணக்க வழிபாடுகளை அறியக்கூடிய வாய்ப்பும் இந்த பயணம் மூலம் கிட்டியது" என்றார். 

தமிழ் - சிங்கள மக்களினது ஒற்றுமையில் விரிசல் ஏற்பட மொழி ஒரு காரணமாக உள்ளது. வடகிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்கள் சிங்களம் பேசுவது குறைவு. இது போன்று கண்டிக்கு சென்ற ஊடகர்களினது அனுபவப் பகிர்வு மூலமாக நல்ல பல சமூக நல்லிணக்கத்தை கற்க கூடிய வாய்ப்பும் சிங்கள மொழி பாட நெறியால் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது. 

மொழி என்பது இந்த நாட்டில் கட்டாயமானது அதுபோலவே சிங்கள தமிழ் மொழி அரச கரும மொழியாக காணப்படுவதுடன், உரிமைகளில் ஒன்றாகவும் காணப்படுகிறது. தமிழ் சிங்கள பாடநெறி இரு வகுப்புக்களை ஒன்றாக வைத்து இடம் பெறும் போது குழு கலந்துரையாடல் மூலமாக நல்லிணக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் அதிகமாக காணப்படுகிறது. பெரும்பான்மை இன சமூகம் சிறுபான்மை மூலமான சமூகத்துடன் ஒற்றுமையாக வாழ இந்த பாடநெறி எமக்கு பாரிய வழிகாட்டியாக உள்ளது. 

திருகோணமலை மாவட்டத்தில் மாத்திரமே மூவினத்தையும் சேர்ந்த ஓர் ஊடக சங்கமும் திறம்பட செயற்பட்டு வருகிறது. ஒரு சமூகத்தின் கலை, கலாசார, பாரம்பரியம் மற்றும் அதன் மூலமான சக வாழ்வு நல்லிணக்கமும் தோன்றுகிறது. குறித்த சமூக வெளிப்பாடு மூலமாக அனைவரும் ஒன்றாய் புரிந்துணர்வுடன் கூடிய நிலை இதன்மூலம் கட்டியெழுப்பப்படுகிறது. 

குறித்த பாடநெறி மூலமாக ஒரு நாள் கொண்ட கண்டி களவிஜயம் ஊடாக மாற்று மத சமூகத்தவரின் மொழித் துறை மூலமாக எங்களுக்குள் காணப்படும் சகவாழ்வினை புரியக்கூடியதான வாய்ப்பு கிட்டியது. ஏனைய அரச துறை உத்தியோகத்தர்களுக்கு வெறுமெனே பாடநெறி மாத்திரம் நடத்தப்பட்டாலும் இது முற்றிலும் மாறுபட்டதான பல அனுபவப் பகிர்வை தந்துள்ளது. 

சிங்கள மொழி பாட நெறியை பயில்வதன் மூலம் நாம் அவர்களுடன் அன்பாக பழகவும் இன நல்லிணக்கத்தை கற்றுக்கொள்ள கூடிய வாய்ப்பும் கிட்டுகிறது. இந்த பாடநெறி மூலம் சிங்கள மொழி பேசும் சக நண்பியான கான்சனா சிதுமினியின் வீட்டுக்கு சென்ற நண்பன் ஒருவன் இவ்வாறு தனது மொழி அனுபவத்தை பகிர்ந்து கொண்டார், " சிங்கள மொழி பெரியளவில் தெரியாவிட்டாலும் சிங்கள நண்பியிடம் ஏதோ ஒரு வகையில் அறை குறையாவது கதைக்கவும் வாய்ப்பு கிட்டியது. அவரது கணவன் அசான் மிக அன்பாக எனது குடும்பத்தை அனுசரித்தார் குடும்பத்துடன் சென்ற என்னை விருந்துபசாரம் வழங்கி அவர்களது மதவழிபாட்டு தளத்துக்கும் அழைத்து சென்றார் இது மிகவும் சந்தோசத்தை தந்தது" என்றார். 

இவ்வாறாக நாட்டின் ஏனைய மாவட்டங்களில் சிங்கள தமிழ் மொழியை விசேடமாக களப் பயணம் ஊடாக கற்று அனுபவங்களை பகிர்வதன் மூலம் சிங்கள தமிழ் என்ற பாகுபாடு இன்றி ஒற்றுமையாக வாழ முடியும் என எதிர்பார்க்கலாம். 

மக்கள் மத்தியில் குழப்பமற்ற இனமத வாத போக்கற்ற நிலையின்றி வாழ்வதற்கு மொழியின் முக்கியம் முக்கியமாக காணப்படுகிறது. எமது குழுவினரது களப் பயணம் ஊடாக பல அனுபவங்களை கற்க நேரிட்டது. குழுக் கலந்துரையாடல் மூலமாக நல் உறவு பலப்படுத்தப்பட்டது. ஒரே பஸ்ஸில் நாம் சென்று கண்டி ஊடகர்களுடனான மையக் குழு கலந்துரையாடல் ஊடாக அனுபவப் பகிர்வின் போது மேலும் சமூக நல்லிணக்கத்துக்கு வழி கோலியது.

இவ்வாறான தமிழ் - சிங்கள மொழியை அரச உத்தியோகத்தர்கள், ஊடகர்களன்றி இளைஞர் - யுவதிகள் சமூக மட்ட சிவில் அமைப்புக்களுக்கும் பயிற்சியை வழங்குவதன் மூலம் நாட்டில் சகவாழ்வினை கட்டியெழுப்ப முடியும். 

சிங்கள மக்கள் நம்மீது கொண்ட எண்ணங்கள் மொழியை கற்பதன் ஊடாக நாமும் சிங்கள மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட முடியும். எழுத்தாணி போன்ற அமைப்பு இதனுடன் மாத்திரம் நின்று விடாது, மேலும் பல திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு வர வேண்டும். இவ்வாறான பல கற்றல் அனுபவங்கள் சமூக நல்லிணக்கத்துக்கு சிங்கள மொழி பெரும் பங்காற்றியுள்ளது.

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.