22 ஆம் திருத்தம்: ஜனாதிபதி தேர்தலுக்கு சவாலாக அமையுமா?
அரசியலமைப்பின் 83 ஆம் உறுப்புரையானது, அதன் (ஆ) என்னும் பந்தியில், “ஆறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட” என்னும் சொற்களை இடுவதன் மூலம் திருத்தங்களை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

க.பிரசன்னா
ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களா அல்லது ஆறு வருடங்களா என்பது தொடர்பில் தொடர் சர்ச்சைகள் நிலவி வருகின்றது. மறுபுறம் ஜனாதிபதி தேர்தல் திகதியை இந்த மாதம் அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இவ்வாறான இழுபறிகளுக்கு மத்தியில் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 83 ஆம் உறுப்புரையானது, அதன் (ஆ) என்னும் பந்தியில், “ஆறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட” என்னும் சொற்களை இடுவதன் மூலம் திருத்தங்களை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நீதியமைச்சரும் ஜனாதிபதியும் இணைந்து இதனை அமைச்சரவை அங்கீகாரத்திற்காக இணை அமைச்சரவை பத்திரமாக சமர்ப்பித்திருந்தனர். எனினும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இதனை வர்த்தமானியில் வெளியிடுமாறு நீதியமைச்சர் அதன் செயலாளருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
ஆனால் நீதியமைச்சரின் தீர்மானத்தை ஜனாதிபதி நிராகரித்து வர்த்தமானியில் வெளியிட்டு இருபத்தி நான்கு மணித்தியாலங்கள் கடந்துவிடுவதற்கு முன்னரே அரசாங்கத்திற்குள் பல பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டாலும் ஒரு வாரத்திற்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு உத்தேச அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் எந்த வகையிலும் அழுத்தமாக அமையாது என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எமக்குரிய தேர்தல் சட்டங்களின் படியும் தற்போதைய அரசியலமைப்புக்கமையவுமே நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதன்படி உத்தேச அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தேர்தல் அறிவிப்பு நடவடிக்கைகளுக்கு எந்த வகையிலும் அழுத்தமாக அமையாது என தெரிவித்துள்ளார்.
இதனால் 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் இடம் பெறுவதில் மக்கள் மத்தியில் திட்டமிட்ட கருத்து முரண்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் பதவிக்கால சிக்கல்களை முன்வைத்து பல்வேறு பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இது மக்களின் தேர்தல் நிலைப்பாடுகளை மாற்றியமைக்கும் கருவியாக பயன்படுத்தப்படுகின்றது. எனினும் தற்போது அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டங்களுக்கு அமைவாக ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அண்மையில் தேர்தல் ஆணைக்குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடக சந்திப்பில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அதிகம் வெளிவரும் வதந்திகள் மற்றும் கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவசர ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு தொடர்பில் வெளியிடப்படும் பல்வேறு வதந்திகள், கருத்துகள் போன்றவற்றை தெளிவுபடுத்துவதற்காகவே இந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்ததாகவும் 1976 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக தேர்தல்கள் திணைக்களத்திலும் பின்னர் ஆணைக்குழுவிலும் கடமையாற்றி கிட்டத்தட்ட 15 முதல் 20 க்கு மேற்பட்ட தேர்தல்களை நடத்தியுள்ள போதிலும் இதுபோன்றதொரு சூழலை தாம் இதற்கு முன்னர் கண்டதில்லை எனவும் தேர்தல்கள் ஆணையாளர் இங்கு சுட்டிக்காட்டினார்.
அதன் பின்னர் ஆணைக்குழு கூடி தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானித்த பின்னர் ஜனாதிபதி தேர்தலை அறிவித்து வேட்புமனுக்களை அழைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்வது தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 16 முதல் 21 நாட்களுக்குள் செய்யப்பட வேண்டும். வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளிலிருந்து 4 தொடக்கம் 6 வாரங்களுக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்திற்கிணங்க, அரசியலமைப்பில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஏற்புடைய சந்தர்ப்பமொன்றில் (ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு ஒரு மாதத்திற்கு குறையாத மற்றும் இரண்டு மாதங்களுக்கு மேற்படாத காலக்கெடுவொன்றினுள் ஜனாதிபதித் தேர்தல்களை நடாத்துதல் அல்லது ஜனாதிபதியால் ஜனாதிபதித் தேர்தலொன்றை நடாத்துமாறு தனது விருப்பத்தை வெளிப்படுத்துதல் காரணமாக) ஜனாதிபதித் தேர்தல்களை நடாத்துவதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் அரசியலமைப்பின் படி, பாராளுமன்றத் தேர்தலை ஜனாதிபதி தீர்மானிக்கும் நிலையில் ஏனைய அனைத்து தேர்தல்களையும் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானிக்கும் ஏற்பாடு காணப்படுகின்றது.
எனினும் அரசியலமைப்பின் 30(02), 62(2) மற்றும் 83(ஆ) ஆகிய பிரிவுகளில் ஜனாதிபதியின் பதவிக்காலத்திற்கும் பாராளுமன்றத்தின் காலத்திற்கும் இடையில் முரண்பாடு இருப்பதாக அரசாங்கத்தால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மறுபுறம் அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின் 03வது அத்தியாயத்தின் ஊடாக அரசியலமைப்பின் 30(2)வது சரத்து திருத்தப்பட்டுள்ளதாகவும் அதன் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலம் 06 வருடங்களில் இருந்து 05 வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்தரப்பினர் வாதிட்டு வருகின்றனர்.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் கொண்டு வரப்பட்ட 19 ஆம் திருத்தத்தில் ஜனாதிபதி பதவிக்காலம் தொடர்பில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. இதனால் ஜனாதிபதி பதவி காலம் ஐந்து வருடங்களா, ஆறு வருடங்களா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. மேலும் அரசியலமைப்பின் 40 (1) (அ) பிரிவில் பதவியில் இருந்து வெளியேறும் ஜனாதிபதியின் எஞ்சிய பதவிக் காலத்திற்கு மட்டுமே பதவியில் இருக்கும் ஜனாதிபதி பதவி வகிப்பாரெனவும் ஜனாதிபதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐந்தாண்டு காலம் பதவியில் இருப்பார் என்று 30 (2)வது பிரிவு தெளிவாகக் கூறுவதாகவும் ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவிக்காலம் 5 அல்லது 6 வருடமா என்பது குறித்து உயர் நீதிமன்றத்திடம் கருத்து கேட்டதாகவும் 5 ஆண்டுகள் என்ற நீதிமன்றத்தின் அரசியலமைப்பு உத்தரவின் பேரில் அந்த ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் பல்வேறு தரப்பாலும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் அரசாங்கத்தின் முயற்சியால் தற்போது 22 ஆம் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 30(2)வது சரத்தில், “குடியரசின் ஜனாதிபதி மக்களால் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டுமன்பதுடன், அவர் ஐந்தாண்டுகள் கொண்டதொரு தவணைக்குப் பதவி வகித்தலும் வேண்டும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 62(2)வது சரத்தில், “பாராளுமன்றமானது முன்னதாகக் கலைக்கப்பட்டாலொழிய, ஒவ்வொரு பாராளுமன்றமும் அதன் முதலாவது கூட்டத்துக்கென நியமிக்கப்பட்ட திகதியிலிருந்து ஐந்து ஆண்டுகள் கொண்ட காலத்துக்குத் தொடர்ந்திருத்தல் வேண்டும். அதற்கு மேற்பட்ட காலத்துக்கு அல்ல. அத்துடன் சொல்லப்பட்ட ஐந்து ஆண்டு காலம் முடிவடைதல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாகச் செயற்படுதலும் வேண்டும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 83(ஆ)வது சரத்தில், “விடயத்துக்கேற்ப ஜனாதிபதியின் பதவிக்காலத்தை அல்லது பாராளுமன்றத்தின் வாழ்காலத்தை ஆறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஒரு காலத்துக்கு நீடிக்கின்ற...” என குறிப்பிடப்பட்டுள்ளது.
“அரசியலமைப்பின் 83 (ஆ) சரத்தில் கூறப்பட்டுள்ள ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்த அரசியலமைப்பைப் பயன்படுத்தி ரணில் விக்ரமசிங்க சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அந்த நோக்கத்துடன் அமைச்சரவையில் 22வது அரசியலமைப்பு திருத்தம் இடம்பெறலாம். அதன்படி, சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி, ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதாலும், வாக்கெடுப்பின் மூலம் தங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் என்ற எண்ணத்தாலும் இந்த முயற்சியை மேற்கொள்ள முடியும்” என்று பேராசிரியர் ஜெயதேவ உயங்கொட பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், “19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க, அதில் உள்ளடங்கிய ஒரு சரத்தை திடீரென மாற்ற முயற்சித்தமை சந்தேகத்திற்குரியது” என அரசியல் ஆய்வாளர் கலாநிதி தயான் ஜயதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே 2024 ஆம் ஆண்டு தேர்தல் தவறான தகவல் மற்றும் தொழில்நுட்பம் என்பவற்றுக்கும் அப்பால் அரசியலமைப்பு ரீதியாகவே சவால் செய்யும் ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மக்கள் தீர்ப்பு மற்றும் வாக்களிக்கும் உரிமை என்பவற்றை கேள்விக்குட்படுத்தும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட 19 ஆவது திருத்தத்துக்குப் பின்னர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டு அவரின் பதவிக்காலத்துக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மக்கள் ஆணையை பெற்றுக் கொள்ளும் முயற்சியில் தேர்தலை முகங்கொடுப்பதற்குப் பதிலாக அரசியலமைப்பினை பயன்படுத்தி தேர்தலை சவாலுக்குட்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏற்கனவே ஜனாதிபதி பதவிக்காலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இரு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு தெளிவான பதில் வழங்கப்பட்டுள்ள போதும் ஜனாதிபதி பதவிக்காலம் தொடர்பில் தொடர் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவது மக்கள் மனதில் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.