பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் மகன் காலமானார் – சோகத்தில் இசை ரசிகர்கள்
முரளி கிருஷ்ணா, தெலுங்குத் திரையுலகில் நடிகராகவும் அறியப்பட்டவர். குறிப்பாக விநாயகடு, 100% லவ் உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் நடித்த கதாபாத்திரங்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தன.
இந்தியத் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா இன்று (22) அதிகாலை காலமானார். இந்த திடீர் மறைவு இசை ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஹைதராபாத்தில் தாயுடன் வசித்து வந்த முரளி கிருஷ்ணாவுக்கு இன்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், அது பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
முரளி கிருஷ்ணா, தெலுங்குத் திரையுலகில் நடிகராகவும் அறியப்பட்டவர். குறிப்பாக விநாயகடு, 100% லவ் உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் நடித்த கதாபாத்திரங்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தன.
இசை உலகுக்கு ஈடு இணையற்ற பங்களிப்பை வழங்கிய எஸ்.ஜானகியின் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள இந்தத் துயரச் சம்பவம் குறித்து, திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.