மட்டக்களப்பில் வர்த்தக நிலையம் முன்பாக இளைஞன் சடலமாக மீட்பு
நேற்றிரவு (01) 11 மணி வரை தமது மகன் தங்களுடன் தொலைபேசியில் தொடர்பில் இருந்ததாக உயிரிழந்தவரின் தந்தை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
மட்டக்களப்பு, அரசடி பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக, இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, நேற்றிரவு (01) 11 மணி வரை தமது மகன் தங்களுடன் தொலைபேசியில் தொடர்பில் இருந்ததாக உயிரிழந்தவரின் தந்தை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரும், தடயவியல் பிரிவு பொலிஸாரும் சம்பவ இடத்திற்குச் சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

