திருமணத்திற்கு மறுத்த காதலியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டிய காதலன் சிக்கியது எப்படி?
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வந்த 30 வயதுடைய மிங்கி சர்மா கடந்த சில நாட்களாக காணாமல் போயிருந்தார்
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வந்த 30 வயதுடைய மிங்கி சர்மா கடந்த சில நாட்களாக காணாமல் போயிருந்தார். இந்த நிலையில், யமுனை ஆறு அருகிலுள்ள பாலத்தில் சந்தேகத்திற்கிடமான சாக்குமூட்டை ஒன்று கிடந்ததாக பொதுமக்கள் தகவல் அளித்ததைத் தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த இடத்தில் கிடைத்த ஆதாரங்கள் மற்றும் அருகிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், இருசக்கர வாகனத்தில் ஒருவர் சாக்குமூட்டையை கொண்டு வந்து விட்டுச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து வினய் என்ற நபரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், உயிரிழந்தவர் மிங்கி சர்மா என்பதும், குறித்த நபரும் அவரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்த காதலர்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டது.
திருமணம் குறித்த கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கிடையே மோதல் நிலவி வந்ததாகவும், அந்த வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில் குற்றச் சம்பவம் இடம்பெற்றதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவத்திற்குப் பின்னர் ஆதாரங்களை மறைக்க முயன்றதாகவும் விசாரணையில் வெளிவந்துள்ளது. சம்பந்தப்பட்ட நபரை கைது செய்துள்ள போலீஸார், மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.