ஜார்க்கண்ட் ஏர் ஆம்புலன்ஸ் விமான விபத்து: நோயாளி உட்பட 7 பேர் பலி
ரெட்பேர்ட் ஏர்வேஸ் (Redbird Airways) நிறுவனத்திற்குச் சொந்தமான 'பீச்கிராஃப்ட் C90' ரக விமானம், திங்கள்கிழமை மாலை ராஞ்சியிலிருந்து டெல்லிக்குச் சென்றுகொண்டிருந்தபோது பாரியாட்டு பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட காட்டுப்பகுதியில் விபத்துக்குள்ளானது.
ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் உள்ள சிமரியா வனப்பகுதியில் ஏர் ஆம்புலன்ஸ் (Air Ambulance) விமானம் விழுந்து நொறுங்கியதில், அதில் பயணித்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக சத்ரா சதர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
ரெட்பேர்ட் ஏர்வேஸ் (Redbird Airways) நிறுவனத்திற்குச் சொந்தமான 'பீச்கிராஃப்ட் C90' ரக விமானம், திங்கள்கிழமை மாலை ராஞ்சியிலிருந்து டெல்லிக்குச் சென்றுகொண்டிருந்தபோது பாரியாட்டு பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட காட்டுப்பகுதியில் விபத்துக்குள்ளானது.
இதில் இரண்டு விமானிகள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இரவு 7.11 மணிக்கு ராஞ்சி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம், சுமார் 20 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. மோசமான வானிலை இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என ராஞ்சி விமான நிலைய இயக்குநர் வினோத் குமார் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்து ஜார்க்கண்ட் சுகாதார அமைச்சர் இர்பான் அன்சாரி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மோசமான வானிலையிலும் விமானம் பறக்க எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து ஆராயப்படும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் சஞ்சய் குமார் என்ற நோயாளி மற்றும் அவரது சகோதரி அர்ச்சனா தேவி ஆகியோரும் அடங்குவர். ராஞ்சியில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததாலேயே தனது உறவினரை டெல்லிக்கு அழைத்துச் செல்ல நேரிட்டதாகவும், இதுவே இந்தத் துயரத்திற்கு வழிவகுத்ததாகவும் சஞ்சய் குமாரின் உறவினர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
தற்போது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) மற்றும் விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB) அதிகாரிகள் விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.