35ஆவது ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்கவில்லை - சம்பூர் படுகொலை நினைவேந்தல்

சம்பூரில் அமைந்துள்ள நினைவுத்தூபி வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களால்  நேற்று (7) மாலை உணர்வுபூர்வமான அனுஷ்டிக்கப்பட்டது. 

ஜுலை 8, 2025 - 15:17
ஜுலை 8, 2025 - 15:17
35ஆவது ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்கவில்லை - சம்பூர் படுகொலை நினைவேந்தல்

திருகோணமலை, ஜூலை 8 (நியூஸ்21) - சம்பூர் படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல், சம்பூரில் அமைந்துள்ள நினைவுத்தூபி வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களால்  நேற்று (7) மாலை உணர்வுபூர்வமான அனுஷ்டிக்கப்பட்டது. 

சம்பூரில் 1990ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட 57 பேர் உட்பட அதனை அண்மித்த காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கும் அதிகமான பொது மக்களுக்குமான அஞ்சலி நிகழ்வு இதன்போது நடைபெற்றது. 

இதன்போது, படுகொலை செய்யப்பட்டு உயிர் நீத்த உறவுகளுக்கு மலர் தூவி, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், இந்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பெண் உரிமை பாதுகாவலர்கள், சிவில் அமைப்புகள், அரசியல்வாதிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

“இந்த கொடூரமான படுகொலை சம்பவத்தின்போது சீருடை அணிந்த, ஆயுதம் தாங்கிய படைகள், பிற்பகல் 2 மணியளவில் சம்பூரில் அமைந்த குடியிருப்புகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

இதன்போது மக்கள் தங்கள் பிள்ளைகள், குடும்ப உறுப்பினர்களுடன் சாக்கரவட்டவன் காட்டுப் பகுதிகளுக்குச் சென்று, பாதுகாப்பாக தஞ்சம் அடைந்தனர். 

பின்னர், அவர்களை ஊருக்குள் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டதும், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் ஆலயங்களில் தஞ்சம் புகுந்தனர். ஆனால், காட்டுக்குள் பதுங்கியிருந்த ஆண்களை பாதுகாப்புப் படைகள் வெட்டியும், சுட்டும், எரித்தும் படுகொலை செய்தனர்” எனவும் “இந்தக் கூட்டுப் படுகொலையின் 35 ஆண்டுகள் கடந்தும், சம்பூர் மக்களுக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை” என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

யுத்தம் முடிந்து 15 ஆண்டுகளாகின்ற நிலையிலும், நாட்டின் எந்தவொரு அரசாங்கமும் இதுவரை உரிய நீதிச் செயல்முறைகளை மேற்கொள்ளவில்லை. 

தற்போதைய அரசாங்கம், சம்பூர் பகுதியில் இடம்பெற்ற படுகொலைகளுக்கான நீதியை உறுதி செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும் எனவும் அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!