பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச வீடியோக்களை காட்டிய நபர் கைது

11 முதல் 14 வயதுக்குட்பட்ட பாடசாலை செல்லும் மாணவர்களிடம் சந்தேகநபர் ஆபாச வீடியோக்களை காட்டியதாக, நானுஓயா பகுதியில் உள்ள பல பாடசாலைகளின் மாணவர்கள் அளித்த முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே, இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனவரி 21, 2026 - 11:47
பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச வீடியோக்களை காட்டிய நபர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு பல சந்தர்ப்பங்களில் ஆபாச வீடியோக்களை காட்டிய குற்றச்சாட்டின் பேரில், நானுஓயா பகுதியைச் சேர்ந்த ஒருவரை நேற்று (20) பொலிஸார் கைது செய்துள்ளதாக நானுஓயா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜனக பண்டார தெரிவித்தார்.

11 முதல் 14 வயதுக்குட்பட்ட பாடசாலை செல்லும் மாணவர்களிடம் சந்தேகநபர் ஆபாச வீடியோக்களை காட்டியதாக, நானுஓயா பகுதியில் உள்ள பல பாடசாலைகளின் மாணவர்கள் அளித்த முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே, இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், நானுஓயா பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தந்தையான சந்தேகநபரை, நுவரெலியா மாவட்ட நீதவான் முன்னிலையில் இன்று (21) ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதேவேளை, நானுஓயா பொலிஸ் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி பி.எஸ். சஞ்சீவனி தலைமையில், பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து நானுஓயா பகுதி மக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வு திட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். அந்த நிகழ்வின் போதே இந்த முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனுடன் தொடர்புடைய வகையில், நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்த 06 மாணவிகள், சட்ட வைத்திய அறிக்கையைப் பெறுவதற்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிசோதனைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸ் நிலையத்தின் மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!