இலங்கையில் 2025 இல் நீர்வெறுப்பு நோயினால் 14 மரணங்கள் பதிவு: சுகாதார அமைச்சு தகவல்
பாலூட்டி விலங்குகளிடமிருந்து வைரஸ் மூலம் பரவும் இந்நோய் 100% மரணத்தை ஏற்படுத்தக்கூடியது. விலங்குகள் கடித்தாலோ, கீறினாலோ அல்லது காயங்களை நக்கினாலோ இந்நோய் பரவக்கூடும்.
2025ஆம் ஆண்டில் இலங்கையில் ரேபிஸ் (நீர்வெறுப்பு நோய்) காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அதுல லியனபத்திரண தெரிவித்துள்ளார்.
இது இலங்கை வரலாற்றில் ஒரு வருடத்தில் பதிவான மிகக் குறைந்த மரண எண்ணிக்கையாக இருந்தபோதிலும், 2030ஆம் ஆண்டளவில் இந்நாட்டை ரேபிஸ் மரணங்கள் இல்லாத நாடாக மாற்றுவதே அரசாங்கத்தின் இலக்காகும்.
இந்த மரணங்கள் அதிகளவில் புத்தளம், குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் பதிவாகியுள்ளன. உயிரிழந்தவர்களில் இளைஞர்களும் சிறுவர்களும் அடங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பாலூட்டி விலங்குகளிடமிருந்து வைரஸ் மூலம் பரவும் இந்நோய் 100% மரணத்தை ஏற்படுத்தக்கூடியது. விலங்குகள் கடித்தாலோ, கீறினாலோ அல்லது காயங்களை நக்கினாலோ இந்நோய் பரவக்கூடும்.
ஏதேனும் ஒரு விலங்கு கடித்தால், உடனடியாக ஓடும் நீரின் கீழ் சவர்க்காரம் (Surgical Soap) இட்டு 15 நிமிடங்கள் வரை கழுவுவதுடன், தாமதிக்காமல் உரிய தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதன் மூலம் மரணத்தைத் தவிர்க்க முடியும் என வைத்திய நிபுணர் மேலும் வலியுறுத்தினார்.