கொள்ளுப்பிட்டி தனியார் நிறுவன ஊழியர்கள் நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டன!
தெனியாய பகுதியில் உள்ள நீரோடையில் நீராடச் சென்று நீரில் மூழ்கிக் காணாமல் போயிருந்த கொள்ளுப்பிட்டியிலுள்ள தனியார் நிறுவனமொன்றின் ஊழியர்கள் நால்வரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கொள்ளுப்பிட்டியில் இயங்கிவரும் தனியார் கணினி நிறுவனமொன்றில் பணிபுரியும் 07 இளைஞர்கள் கொண்ட குழுவினர் சுற்றுலாப் பயணமாக தெனியாய பகுதிக்குச் சென்றிருந்த போதே, இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. தெனியாய, பெவரலிய பகுதியிலுள்ள காலே தொல எனும் இயற்கை நீரோடையில் குறித்த குழுவினர் நீராட முற்பட்டுள்ளனர்.
அக்குழுவிலிருந்த 6 பேர் நீரோடையில் இறங்கி நீராடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், அவர்களில் நால்வர் திடீரென நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.
இதனையடுத்து காணாமல் போனவர்களைக் கண்டறியும் நோக்கில் இலங்கை கடற்படையினர், பொலிஸார் மற்றும் பிரதேச வாசிகள் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
முன்னெடுக்கப்பட்ட தேடுதல் பணிகளின் போது மூன்று பேரின் சடலங்கள் ஏற்கெனவே மீட்கப்பட்டிருந்த நிலையில், காணாமல் போயிருந்த நான்காவது நபரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.
கடற்படை சுழியோடிகள் மற்றும் பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கை, நால்வரினதும் சடலங்களும் மீட்கப்படும் வரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

