சிங்கப்பூரில் பாலியல் தொழில் தொடர்பான சுற்றிவளைப்பு: 195 பேர் கைது

சிங்கப்பூரில் பாலியல் தொழில் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிரான நாடளாவிய சுற்றிவளைப்பில் 195 பேர் கைது. 6 இலட்சம் டொலருக்கும் அதிகமான வங்கிப் பணம் முடக்கம்.

சிங்கப்பூரில் பாலியல் தொழில் தொடர்பான சுற்றிவளைப்பு: 195 பேர் கைது
ADVERTISEMENT
ADVERTISEMENT

சிங்கப்பூரில் சட்டவிரோத பாலியல் தொழில் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றச் செயல்களுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட பொலிஸ் நடவடிக்கையில் 195 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் ஒக்டோபர் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளதாக சிங்கப்பூர் பொலிஸார் இன்று (நவம்பர் 8) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கைது செய்யப்பட்டவர்களில் 187 பெண்களும் 8 ஆண்களும் அடங்குகின்றனர். அவர்களின் வயது 18 முதல் 63 வரையாகும்.

சிங்கப்பூரின் பெண்கள் சாசனச் சட்டம் 1961 (Women's Charter), வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்புச் சட்டம் 1990, சூதாட்டக் கட்டுப்பாட்டுச் சட்டம் 2022 மற்றும் தண்டனைச் சட்டம் 1871 ஆகியவற்றின் கீழ் இடம்பெற்றதாகச் சந்தேகிக்கப்படும் பல்வேறு குற்றங்கள் தொடர்பாக இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட 195 பேரில் 16 பேர் சட்டவிரோத பாலியல் தொழில் தொடர்பான நடவடிக்கைகளுக்கு உதவியதாகச் சந்தேகிக்கப்படுகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இத்தகைய நடவடிக்கைகளை ஏற்பாடு செய்தல், அவற்றிற்கு உதவுதல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் வருமானம் ஈட்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சுற்றிவளைப்புகளின்போது பல்வேறு மின்னணு சாதனங்களையும் பணத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறிப்பாக கையடக்கத் தொலைபேசிகள், கணினிகள் மற்றும் பாலியல் தொழில் தொடர்பான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், 150,000 சிங்கப்பூர் டொலருக்கும் அதிகமான பணம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், 600,000 சிங்கப்பூர் டொலருக்கும் அதிகமான பணம் காணப்பட்ட வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

இந்தப் பணம் மற்றும் பொருட்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கைது செய்யப்பட்டவர்களில் 41 வயதான சிங்கப்பூர் பிரஜை ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத பாலியல் தொழில் தொடர்பான நடவடிக்கைகளுக்கு உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் அவர் ஒக்டோபர் 23ஆம் திகதி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

ஏனைய சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் தொலைத்தொடர்பு சேவைகளைப் பயன்படுத்தி, பணத்திற்கு ஈடாகப் பெண்கள் அல்லது சிறுமிகள் மூலம் பாலியல் சேவைகளை வழங்குவதாக விளம்பரப்படுத்துவது உள்ளிட்ட குறிப்பிட்ட குற்றங்களுக்கு கடுமையான சட்டத் தண்டனைகள் விதிக்கப்படுகின்றன.

இத்தகைய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை, 100,000 சிங்கப்பூர் டொலர் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மேலும், பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக ஏற்பாடு செய்தல், மற்றொருவரின் பாலியல் தொழில் வருமானத்தில் தெரிந்தே வாழ்தல் அல்லது அதற்கு உதவும் சேவைகளுக்காகப் பணம் பெறுதல் போன்ற குற்றங்களுக்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 100,000 சிங்கப்பூர் டொலர் அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்பிட்ட குற்றங்களை மீண்டும் புரிபவர்களுக்கு ஏழு முதல் பத்து ஆண்டுகள் வரையான சிறைத்தண்டனையும், அதிகபட்சமாக 150,000 சிங்கப்பூர் டொலர் அபராதமும் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத பாலியல் தொழில் தொடர்பான குற்றக் குழுக்களின் நடவடிக்கைகள் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமைவதாக சிங்கப்பூர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலியஸ் லிம் (Julius Lim) தெரிவித்துள்ளார்.

இத்தகைய குழுக்களின் நடவடிக்கைகள் பாலியல் தொழில் தொடர்பான குற்றங்களுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படுவதில்லை என்றும், ஏனைய குற்றச் செயல்களுடனும் தொடர்புபட்டிருக்கக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றக் குழுக்கள் தொழில்நுட்ப வசதிகளை அதிகளவில் பயன்படுத்துவதுடன் நாடுகளின் எல்லைகளைக் கடந்தும் செயற்படுவதால், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான பொலிஸ் நடவடிக்கைகளும் அதற்கேற்ப மேம்படுத்தப்பட வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டிலும் வெளிநாட்டு சட்ட அமுலாக்க அமைப்புகளுடனான ஒத்துழைப்பின் மூலமும் இத்தகைய குற்றக் குழுக்களின் நடவடிக்கைகளை முறியடிக்கத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என சிங்கப்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT