பிள்ளைக்குப் படிக்கத் தெரியவில்லை என ஆத்திரமடைந்த தந்தை பாடசாலையில் துப்பாக்கிச் சூடு!
தமது பிள்ளைக்கு அடிப்படை வாசிப்பு மற்றும் எண்கணிதக் கணிப்பீடுகள் இன்னும் சரியாகத் தெரியவில்லை என்ற ஆத்திரத்தில், பாடசாலை வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து, வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டு அச்சுறுத்தல் விடுத்த தந்தை ஒருவர் தாய்லாந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்தின் சிக்கியூ (Sikhiu) பிரதேசத்தில் அமைந்துள்ள பான் நா டி (Ban Na Di) பாடசாலையில் இச்சம்பவம் பதிவாகியுள்ளதுடன், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பாடசாலை முடிந்து தனது பிள்ளையை அழைத்துச் செல்வதற்காக 54 வயதுடைய மனச்சாய் சாந்தசோம் (Manachai Chanthasom) என்பவர் பாடசாலை வளாகத்திற்குச் சென்றுள்ளார்.
அங்கு தமது பிள்ளையின் கல்வி வளர்ச்சி தொடர்பில் வகுப்பாசிரியருடன் அவர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அந்த வாக்குவாதத்தின் போது மதுபோதையில் இருந்த அவர் துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி இரண்டு முறை சுட்டுவிட்டு, தனது பாரவூர்தியில் தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில் ஆசிரியர்களுக்கோ அல்லது மாணவர்களுக்கோ எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என்பதுடன், தகவல் அறிந்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்து, அவரிடமிருந்த துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளனர்.
சட்டவிரோதமாகத் துப்பாக்கி வைத்திருந்தமை, உரிய அனுமதியின்றிப் பொது இடத்தில் துப்பாக்கியை ஏந்திச் சென்றமை மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.