கடும் குளிரிலும் உழைத்த ஊழியர்களுக்கு BMW கார்களைப் பரிசளித்த உணவக உரிமையாளர்!
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஊழியர்களுக்கு, சீனாவைச் சேர்ந்த உணவக உரிமையாளர் ஒருவர் புதிய BMW கார்களைப் பரிசாக வழங்கிக் கௌரவித்துள்ளார்.
ஹெனான் மாகாணத்தின் ஜியாவ்சோ நகரில் மாட்டிறைச்சி உணவகம் நடத்தி வரும் மா யான்லி என்பவரே தனது நிறுவனத்தில் சிறப்பாகப் பணியாற்றிய ஊழியர்களுக்கு இந்த விலையுயர்ந்த பரிசுகளை வழங்கியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 24ஆம் திகதி இந்த சொகுசு கார்கள் ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக South China Morning Post செய்தி வெளியிட்டுள்ளது.
சுமார் 300,000 யுவான் (சுமார் 14 கோடி 80 இலட்சம் இலங்கை ரூபாய்) மதிப்புடைய இந்த சொகுசு கார்களை ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என்ற எண்ணம் மா யான்லிக்கு கடந்த ஆண்டு ஏற்பட்டுள்ளது. கடும் குளிர் நிலவிய ஒருநாள் அதிகாலையில், தனது உணவகத்தில் 08 ஆண்டுகளாகப் பணியாற்றும் ஊழியர் ஒருவர், மின் சைக்கிளில் பணிக்கு வந்துள்ளார். குளிரினால் அவரது முகம் சிவந்து, காதுகள் ஊதா நிறமாக மாறி, கைகளும் விரைத்துப் போயிருந்ததைக் கண்ட மா யான்லி மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார்.
தம்மைப் போன்றே தனது ஊழியர்களும் காரில் கதகதப்பாகவும் சௌகரியமாகவும் பயணிக்க வேண்டும் என அப்போது அவர் முடிவு செய்தார். உணவகத்தின் வெற்றிக்கு ஊழியர்களின் கடின உழைப்பே முக்கிய காரணம் எனவும், அந்த வெற்றியின் பலனை அவர்களும் அனுபவிக்க வேண்டும் எனவும் மா யான்லி தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலங்களில் ஊழியர்களுக்கு அத்தியாவசியப் பொருள்களையும் ரொக்க ஊக்கத்தொகையையும் வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இவரது இந்த பெருந்தன்மையான செயல், இணையத்தில் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.