இலங்கையர்களுக்கு சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு – குறைந்தபட்ச சம்பளம் 2,000 டொலர்!
சிங்கப்பூரில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறைக்குத் தீர்வுகாணும் வகையில், இலங்கை உள்ளிட்ட சில வெளிநாடுகளின் பணியாளர்களை 8 புதிய தொழில் பிரிவுகளின் கீழ் பணி அனுமதிப் பத்திரத்தில் இணைத்துக் கொள்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
உணவு விநியோகம், சமூக சேவைகள் மற்றும் விமானப் போக்குவரத்து ஆகிய மூன்று முக்கிய துறைகளில் உள்ள பணியிடங்களுக்காக இந்த வாய்ப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் மனிதவள அமைச்சால் அறிவிக்கப்பட்டுள்ள பாரம்பரியமற்ற தொழில் மூலங்கள் பட்டியலின் கீழ் இந்தப் புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதற்கமைய இறைச்சி மற்றும் மீன் வெட்டுவோர் உள்ளிட்ட உணவு தயாரிப்பாளர்கள், உணவு மற்றும் பானக் கடை உதவியாளர்கள், சமையலறை உதவியாளர்கள், உணவு பரிமாறுபவர்கள், விமான பணிப்பெண்கள் மற்றும் பணிப்பாளர்கள், குழந்தைப் பராமரிப்பாளர்கள், ஆரம்பப் பருவக் கல்வியியலாளர்கள் மற்றும் ஆசிரியர் உதவியாளர்கள் ஆகிய பணிகளுக்காக வெளிநாட்டுப் பணியாளர்களை பணியமர்த்த முடியும்.
இந்த விசேட திட்டத்தின் கீழ் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்குத் தகுதிபெற்ற 9 நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை தவிர்ந்த பங்களாதேஷ், பூட்டான், கம்போடியா, இந்தியா, லாவோஸ், மியான்மர், பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் பிரஜைகளும் இந்த வாய்ப்பைப் பெறத் தகுதி பெற்றுள்ளனர்.
உள்நாட்டு ஊழியர்களைக் கண்டறிவதில் வர்த்தக நிறுவனங்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகளைக் களைவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
புதிய விதிமுறைகளின்படி, இந்தத் திட்டத்தின்கீழ் வெளிநாட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்கள், அவர்களுக்குக் குறைந்தபட்சம் 2,000 சிங்கப்பூர் டொலர்களை நிலையான மாதாந்த சம்பளமாக வழங்க வேண்டும். அதேவேளை, ஒரு நிறுவனத்தின் மொத்தப் பணியாளர்களில் இத்திட்டத்தினூடாக உள்வாங்கப்படும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை 8 சதவீதத்தைத் தாண்டக்கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விரிவாக்கமானது சிங்கப்பூரில் விருந்தோம்பல், உணவு விநியோகம், சிறுவர் பராமரிப்பு மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளில் தொழில் தேடும் இலங்கையர்களுக்குக் கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இருப்பினும், இந்த விதிமுறை மாற்றமானது தானாகவே வேலைவாய்ப்பையோ அல்லது பணி அனுமதிப் பத்திர அனுமதியையோ உறுதிப்படுத்தாது எனவும், சிங்கப்பூரிலுள்ள தொழில் வழங்குநர்கள் உரிய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து அனுமதியைப் பெறவேண்டியது கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

