தீபாவளிப் பண்டிகை: தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விசேட விடுமுறை
தீபாவளிப் பண்டிகையையொட்டி, மத்திய, ஊவா, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் உள்ள தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (09) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் தீபாவளிப் பண்டிகை, நாளை ஞாயிற்றுக்கிழமை (08) கொண்டாடப்படுவதால், அதற்கு மறுநாளான திங்கட்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த விசேட வேண்டுகோளுக்கு இணங்க இந்த விடுமுறைக்கு மாகாண அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, நவம்பர் 09 ஆம் திகதி தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதோடு, அதற்குப் பதிலாக எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலைகளை நடத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மாகாண அமைச்சால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், நவம்பர் 09ஆம் திகதி நடைபெறவிருந்த பாடசாலைப் பருவகாலப் பரீட்சை நடவடிக்கைகள் யாவும் அன்றைய தினம் இடைநிறுத்தப்பட்டு, மாற்றீடாக நவம்பர் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.