அரிசி, சீனி, பருப்பு, கோதுமை மா விலைகளைக் காட்சிப்படுத்தவில்லையா? 200 கடைகளுக்கு எதிராக வழக்கு பதிவு!
பொருட்களின் விலைகளைக் காட்சிப்படுத்தத் தவறியமை உள்ளிட்ட பல்வேறு நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட மீறல்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின்போது சுமார் 200 வர்த்தக நிலையங்கள் கண்டறியப்பட்டு, சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினால் 2026 ஒக்டோபர் 20ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டின் பல்வேறு மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் முன்னெடுக்கப்பட்ட விசேட சந்தை விசாரணைகளின்போதே, இந்த சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நுகர்வோர் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு முன்னர் அவற்றின் விலைகளைத் தெளிவாக அறிந்துகொள்வதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்துதல், சந்தையில் விலை தொடர்பான வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல் மற்றும் நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டே, இந்த விசேட வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டது.
இவ்வேலைத்திட்டத்தின் கீழ் அரிசி, சீனி, பருப்பு, மரக்கறிகள், பழங்கள், கோதுமை மா, பேக்கரி உற்பத்திகள், சிற்றுண்டிகள், ஆடைகள், மின்சார உபகரணங்கள், கையடக்கத் தொலைபேசி உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய மற்றும் நுகர்வுப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
குறிப்பாக, அன்றாட அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சீனி, பருப்பு மற்றும் மரக்கறிகளின் விலைகளைக் காட்சிப்படுத்தத் தவறிய பல வர்த்தக நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், அம்பாறை, மட்டக்களப்பு, அநுராதபுரம், குருநாகல், புத்தளம், கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, மொனராகலை, திருகோணமலை, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் இந்தச் சட்ட மீறல்கள் பதிவாகியுள்ளதாக மாவட்ட அலுவலகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் கோதுமை மா விற்பனை, சந்தை கையிருப்பு மற்றும் சட்ட விதிகளுக்கு அமைவான விற்பனை முறைகள் தொடர்பிலும் இதன்போது விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2003ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் 26(1) ஆம் பிரிவின் பிரகாரம், பொருட்களிலோ அல்லது அவற்றின் பொதிகளிலோ சட்டபூர்வமாக விலை குறிப்பிடப்படாத சந்தர்ப்பங்களில், நுகர்வோர் தெளிவாகக் காணக்கூடிய வகையில் விற்பனை நிலையங்களில் விலையைக் காட்சிப்படுத்துவது வர்த்தகர்களின் கட்டாய சட்டபூர்வப் பொறுப்பாகும் என அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
சந்தையில் நியாயமான சூழலைப் பேண நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை முழுமையாகப் பின்பற்றுமாறு வர்த்தகர்களைக் கேட்டுக்கொண்டுள்ள அதிகாரசபை, விலைகளைக் காட்சிப்படுத்தாமை உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பில் அலுவலக நேரங்களில் 1977 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடுகளைப் பதிவு செய்யுமாறு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.