ஒரே நிறுவனத்தைச் சார்ந்திருக்கும் உலகம்? 22 மணிநேரத்துக்கும் மேலாக மைக்ரோசாப்ட் முடக்கம் வெளிப்படுத்திய அதிர்ச்சிகரமான நிலை!

அமேசானின் கிளவுட் கணினிச் சேவையான AWS போன்று சேவைகளைப் பிராந்திய ரீதியாகப் பிரிப்பதே எதிர்காலத்தில் இவ்வாறான பாதிப்புகளைக் குறைப்பதற்கான தீர்வாக அமையும் எனக் கூறியுள்ளார்.

ஒரே நிறுவனத்தைச் சார்ந்திருக்கும் உலகம்? 22 மணிநேரத்துக்கும் மேலாக மைக்ரோசாப்ட் முடக்கம் வெளிப்படுத்திய அதிர்ச்சிகரமான நிலை!
ADVERTISEMENT
ADVERTISEMENT

உலகம் முழுவதும் உள்ள பாடசாலைகள், சுகாதார அமைப்புகள், வணிக நிறுவனங்கள், நீதிமன்றங்கள் மற்றும் அரச திணைக்களங்களைப் பாதித்த பாரிய மைக்ரோசாப்ட் (Microsoft) தொழில்நுட்ப முடக்கம் ஏற்பட்டது. 22 மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்த இந்த முடக்கத்தால் 74க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 430 மில்லியன் Microsoft 365 பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வியாழக்கிழமை இரவு முதல் பயனர்கள் மின்னஞ்சல்களை அனுப்பவோ பெறவோ முடியாமலும், கோப்புகள் மற்றும் நாட்காட்டி (Calendar) விவரங்களைப் பார்வையிட முடியாமலும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். Teams, Outlook மற்றும் Copilot AI ஆகிய பிரதான சேவைகள் இந்தத் தொழில்நுட்ப இடையூறினால் முடங்கின. வழமையான தானியங்கி சோதனைகளின் போது சில சேவையகங்கள் (Servers) செயலிழந்தமையால், எஞ்சியிருந்த சேவையகங்களில் அதிகப்படியான தரவுப் போக்குவரத்துச் சுமை ஏற்பட்டதே, இந்த முடக்கத்துக்குக் காரணமாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த முடக்கத்தின் தாக்கம் பரவலாகக் காணப்பட்டதுடன், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை மற்றும் அவுஸ்திரேலிய உளவுத்துறை முகவரகங்களின் மின்னஞ்சல் கட்டமைப்புகள் செயலிழந்தன. அத்துடன், சிங்கப்பூரில் உள்ள நீதிமன்றக் கட்டமைப்புகளும் இந்தியாவில் உள்ள விமான சேவை உதவி மையங்களும் இதனால் பாதிக்கப்பட்டன. பொறியியலாளர்கள் சேவைகளைப் படிப்படியாகச் சீரமைக்க ஏறக்குறைய ஒரு முழு நாள் தேவைப்பட்டமையானது, அத்தியாவசியச் சேவைகள் ஒரு சில முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களை எந்தளவிற்குச் சார்ந்துள்ளன என்ற பாரிய கேள்வியை எழுப்பியுள்ளது.

நிறுவனங்கள் தமது அன்றாடச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு மைக்ரோசாப்ட் அவுட்லுக் போன்ற டிஜிட்டல் கட்டமைப்புகளை எந்தளவிற்குச் சார்ந்துள்ளன என்பதை இந்த முடக்கம் மிகத் தெளிவாக நினைவூட்டியுள்ளதாக Small Business Charter அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஃப்ளோரா ஹாமில்டன் தெரிவித்துள்ளார். பல சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கு (SMEs), வாடிக்கையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுடன் தொடர்பு கொள்வது முதல் வருமானம் ஈட்டுவது வரையிலான அனைத்துச் செயற்பாடுகளுக்கும் மின்னஞ்சல் அணுகல் அடிப்படைத் தேவையாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தச் சம்பவத்துக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளதுடன், இது எந்தவொரு சைபர் தாக்குதலாலும் ஏற்படவில்லை என்றும், தொழில்நுட்பக் கோளாறினாலேயே ஏற்பட்டது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

சேவைகள் எப்போது முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பும் என்பதற்கான துல்லியமான நேரத்தைக் குறிப்பிட முடியாது என வெள்ளிக்கிழமை (GMT) பிற்பகல் வெளியிட்ட அறிக்கையில் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. தேவைகளின் அளவைக் கருத்தில்கொண்டு சேவைகள் படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டதாகவும், இதற்கு அதிக நேரம் எடுத்தாலும் நிலையான மீட்சியை உறுதிப்படுத்த இது உதவியதாகவும் அந்நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகளின் பலவீனங்களையும் தங்கியிருப்பையும் இந்த முடக்கம் வெளிப்படையாகக் காட்டியுள்ளதாக செயற்கை நுண்ணறிவு மூலோபாய நிபுணர் வால்டர் பாஸ்குவேரெல்லி பிபிசிக்கு (BBC) தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு உதவியாளர்கள் (AI assistants) எமது மின்னஞ்சல்கள், நாட்காட்டிகள் மற்றும் கோப்புகளுடன் இணைக்கப்படும்போது, இவ்வாறானதொரு கோளாறு இன்னும் பாரிய அளவில் பரவக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இவ்வாறான முடக்கங்கள் இதுவரை கேள்விப்படாத ஒன்றல்ல எனினும், இதிலிருந்து மீள்வதற்கு மைக்ரோசாப்ட் எடுத்துக்கொண்ட கால அவகாசமே வழக்கத்திற்கு மாறானதாக உள்ளதாகப் பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றிய முன்னாள் மென்பொருள் பொறியியலாளர் கெர்கலி ஒரோஸ் தெரிவித்துள்ளார். 

ஒரு சில பாரிய அமெரிக்க நிறுவனங்களை நாம் எந்தளவிற்குச் சார்ந்திருக்கிறோம் என்பதை இந்தப் பாதிப்பு காட்டுவதாகக் குறிப்பிட்ட அவர், அமேசானின் கிளவுட் கணினிச் சேவையான AWS போன்று சேவைகளைப் பிராந்திய ரீதியாகப் பிரிப்பதே எதிர்காலத்தில் இவ்வாறான பாதிப்புகளைக் குறைப்பதற்கான தீர்வாக அமையும் எனக் கூறியுள்ளார்.

தற்போதைக்கு, எங்கு தவறு நடந்தது என்பது குறித்துத் தாம் மீளாய்வு செய்து வருவதாகவும், அதன் முடிவுகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் இவ்வாறான இடையூறுகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT