ஹோர்முஸ் நீரிணை இனி பழைய நிலைக்குத் திரும்பாது: அமெரிக்காவுக்கு ஈரான் சபாநாயகர் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணை போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பாது என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடனான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ஏழு நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை இனி பழைய நிலைக்குத் திரும்பாது: அமெரிக்காவுக்கு ஈரான் சபாநாயகர் எச்சரிக்கை!
ADVERTISEMENT
ADVERTISEMENT

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போருக்கு முன்னர் இருந்த நிலைக்கு ஹோர்முஸ் நீரிணை இனி ஒருபோதும் திரும்பாது என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகரும் அந்நாட்டின் முக்கியப் பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார். அல் ஜசீரா ஊடகத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

எட்டு மாதங்களாக நீடிப்பதாகக் கூறப்படும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரான் முன்வைத்துள்ள ஏழு அம்சத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஹோர்முஸ் நீரிணையின் நிர்வாகம் தொடர்பில் ஓமானுடன் புரிந்துணர்வு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கடல்வழிப் பாதைகளில் ஒன்றாக ஹோர்முஸ் நீரிணை விளங்குகிறது. பாரசீக வளைகுடாவையும் ஓமான் வளைகுடாவையும் இணைக்கும் இந்த நீரிணை வழியாக சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து நடைபெறுகிறது.

இந்த நிலையில், நீரிணையின் நிர்வாகம் தொடர்பில் ஈரானும் ஓமானும் புதிய புரிந்துணர்வை எட்டியுள்ளதாக காலிபாஃப் கூறியுள்ளார். ஹோர்முஸ் நீரிணையில் சர்வதேச கடற்பரப்புகள் என்ற தனியான பகுதி இல்லை என்றும், 1982ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் கடல் சட்ட உடன்படிக்கை அங்கு பொருந்தாது என்றும் அவர் வாதிட்டுள்ளார்.

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக ஈரான் ஏழு நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக காலிபாஃப் தெரிவித்துள்ளார்.கட்டார் நாட்டின் மத்தியஸ்தம் ஊடாக இந்த நிபந்தனைகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதற்கான உத்தியோகபூர்வ பதிலைத் தெஹ்ரான் எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஈரான் முன்வைத்துள்ள கோரிக்கைகளில் அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை நீக்குதல், பொருளாதாரத் தடைகளை அகற்றுதல், முடக்கப்பட்டுள்ள ஈரானிய நிதியை விடுவித்தல், அனைத்துப் போர் முனைகளிலும் சண்டையை நிறுத்துதல் மற்றும் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக வெளிப்படையாக அறிவித்தல் ஆகியவை அடங்குகின்றன.

கடந்த ஜூன் மாதம் கையெழுத்திடப்பட்டதாகக் கூறப்படும் இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஆவணத்தின் அடிப்படையிலேயே ஈரான் தனது கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக காலிபாஃப் தெரிவித்துள்ளார். அந்தப் புரிந்துணர்வில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னரே அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியும் என்பதே ஈரானின் நிலைப்பாடு என அவர் விளக்கியுள்ளார்.

அமெரிக்கா ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்ட விடயங்களுக்குள் செயற்பட்டால் உடன்பாட்டை எட்டுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், அமெரிக்கா மீதான நம்பிக்கையின்மையே உடன்பாட்டை எட்டுவதற்கான முக்கியத் தடையாக இருப்பதாக காலிபாஃப் தெரிவித்துள்ளார்.

ஈரானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்வதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் உதவியை அமெரிக்க அதிகாரிகள் நாடியதாகவும் காலிபாஃப் கூறியுள்ளார். மொஸ்கோவிற்கு மேற்கொள்ளப்பட்ட விஜயமொன்றின்போது இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் இராணுவத் தாக்குதல்களை மேற்கொண்டால் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என காலிபாஃப் எச்சரித்துள்ளார்.அத்தகைய நடவடிக்கை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அரசியல் அழுத்தங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் பதவியேற்கவுள்ள புதிய அமெரிக்க காங்கிரஸிலிருந்தும் அழுத்தங்கள் உருவாகலாம் என அவர் கூறியுள்ளார். போர் இல்லாத அதேவேளை நிலையான சமாதானமும் இல்லாத சூழ்நிலையிலிருந்து ஈரான் வெளியேற விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். எதிர்காலத் தாக்குதல்களைத் தடுப்பதற்கான இராணுவத் திறன்களைப் பேணுவதும் நாட்டின் பாதுகாப்புக்கு அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

யேமனில் சவூதி அரேபியாவின் ஆதரவைப் பெற்ற அரசாங்கப் படைகளுக்கும் ஹூதிகள் என அழைக்கப்படும் அன்சாருல்லா ஆயுதக் குழுவிற்கும் இடையிலான மோதல் குறித்தும் காலிபாஃப் கருத்து வெளியிட்டுள்ளார். யேமனின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டுத் தலையீடுகள் இருக்கக்கூடாது என்பதே ஈரானின் நிலைப்பாடு என அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, யேமன் அரசாங்கமும் சவூதி அரேபியாவும் உதவி கோரினால் மோதலைத் தீர்ப்பதற்கான மத்தியஸ்த முயற்சிகளில் ஈரான் பங்கேற்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாக, சவூதி அரேபியாவுக்கும் ஹூதி அமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை எளிதாக்குவதற்கான உதவியை வழங்க ஈரான் முன்வந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT