அமெரிக்க அச்சுறுத்தல்கள் நிறுத்தப்பட்டால் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்: ஈரான் அறிவிப்பு
அமெரிக்கா தங்கள் மீதான அச்சுறுத்தல்களையும் தாக்குதல்களையும் நிறுத்தினால் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்து வைக்க முடியும் என ஈரான் அறிவித்துள்ளது.
அமெரிக்கா தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைக் கைவிட்டால், இந்த முக்கிய கடல் வழித்தடம் திறந்திருப்பதை உறுதி செய்யத் தயார் என்று ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாயி தெரிவித்துள்ளார்.
அதேநேரம், ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே புதிய தடைசெய்யப்பட்ட கடல் மண்டலம் ஒன்றை விரைவில் அறிவிக்க ஈரான் திட்டமிட்டுள்ளது. அமெரிக்க கடற்படை முற்றுகைப் பகுதியிலிருந்து பாரசீக வளைகுடாவின் குறிப்பிட்ட பகுதிகள் வரை இந்த புதிய மண்டலம் அமையவுள்ளது.
ஈரானின் அனுமதியின்றி இந்த எல்லைக்குள் நுழையும் கப்பல்களுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும், அத்தகைய கப்பல்களின் காப்பீடு மற்றும் எதிர்காலப் பயணங்கள் பாதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், ஈரான் மற்றும் ஓமன் கடற்பகுதிகளை உள்ளடக்கிய புதிய சர்வதேச கப்பல் போக்குவரத்து வழித்தடத்திற்கான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அவை விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் மொஹ்சென் ரெசாயி சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான எண்ணெய் மற்றும் வர்த்தகப் போக்குவரத்து வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பு சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.