இலங்கை கடற்பரப்பில் வேகமாக குறையும் மீன்வளம் – நாரா விடுத்துள்ள அதிர்ச்சி எச்சரிக்கை!
இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பில் மீன் உற்பத்தி தொடர்ச்சியாகக் குறைந்து வருவதாக தேசிய நீர்வாழ் உயிரின வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (நாரா) எச்சரித்துள்ளது.
இலங்கையில் மட்டுமன்றி உலகின் பல நாடுகளின் கடல் மற்றும் சமுத்திரச் சூழல்களும் இதேபோன்ற சவால்களை எதிர்கொண்டு வருவதாக நாராவின் தலைவர் கலாநிதி சனத் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை திடீரென ஏற்பட்ட ஒன்றல்ல எனக் குறிப்பிட்ட அவர், 2014ஆம் ஆண்டு முதல் இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பில் மீன் உற்பத்தியில் வீழ்ச்சி பதிவாகி வருவதாக தெரிவித்துள்ளார்.
மீன் உற்பத்தி குறைவதற்கு ஒரு குறிப்பிட்ட காரணத்தை மட்டும் சுட்டிக்காட்ட முடியாது எனவும், கடல் உயிரியல் கட்டமைப்பில் ஏற்பட்டு வரும் மாற்றங்களே இதற்கான பிரதான காரணமாக இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, தற்போது நிலவும் மீன்வள வீழ்ச்சிக்கு எல் நினோ (El Niño) காலநிலை நிகழ்வின் தாக்கம் உள்ளதா என்பது இதுவரை தெளிவாக அடையாளம் காணப்படவில்லை என நாரா தெரிவித்துள்ளது. எனவே, எல் நினோ காரணமாக இலங்கைக்கு நேரடியாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த நிலைமை நீண்டகாலத்திற்கு தொடருமானால், மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காக அவர்களை மாற்றுத் தொழில் வாய்ப்புகளை நோக்கி வழிநடத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக நாரா தலைவர் தெரிவித்துள்ளார்.
மீன்வளத்தை அதிகரிப்பதற்காக மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் விசேட வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த வேலைத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நிலைமை தொடர்பில் கருத்து தெரிவித்த தேசிய மீனவக் கூட்டுறவு இயக்கத்தின் அழைப்பாளர் ஹர்மன் குமார, தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் மீன்வளத்தை அழிக்கும் உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு எதிரான சட்டங்கள் முறையாக அமுல்படுத்தப்படாமையே மீன்வளம் குறைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என குற்றம் சுமத்தியுள்ளார்.
மீன்வளத்தைப் பாதுகாப்பதற்கும், மீனவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கும் நீண்டகால அடிப்படையிலான நடவடிக்கைகள் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.