எவரெஸ்ட் பனிப்பாறைகள் வேகமாக உருக சிறுநீரும் காரணம்! புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

எவரெஸ்ட் சிகர அடிப்படை முகாமில் மலையேறிகளின் சிறுநீர் கழிப்பு மற்றும் எரிபொருள் வெப்பத்தால் ஆண்டுதோறும் டன்கணக்கில் பனிப்பாறைகள் உருகுவதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
எவரெஸ்ட் பனிப்பாறைகள் வேகமாக உருக சிறுநீரும் காரணம்! புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்
AI generated image
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

எவரெஸ்ட் சிகரத்தின் அடிப்படை முகாமில் தங்கும் மலையேறிகளின் சிறுநீர் கழிப்பு மற்றும் மனித செயல்பாடுகளால் உண்டாகும் வெப்பம் காரணமாக அங்குள்ள பனிப்பாறைகள் அதிவேகமாக உருகி வருவதாக புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. 

சர்வதேச அறிவியல் இதழான 'வட்டார சுற்றுச்சூழல் மாற்றம்' (Regional Environmental Change) வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கையின்படி, உலகளாவிய பருவநிலை மாற்றமே எவரெஸ்ட் பனி உருகுவதற்கு பிரதான காரணமாக இருப்பினும், உள்ளூர் அளவில் பனிப்பாறைகள் வேகமாகச் சரிவதற்கு மனித கழிவுகளும் செயல்பாடுகளும் முக்கியக் காரணியாக மாறியுள்ளன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மலையேறிகளும் அவர்களது வழிகாட்டிகளும் உயரமான பகுதிகளில் நீர்ச்சத்து குறைபாட்டைத் தவிர்க்க அதிகளவில் தண்ணீர் அருந்துவதால், ஒரு மலையேற்றப் பருவத்தில் அங்கு தினமும் சராசரியாக ஆறாயிரத்துக்கும் அதிகமான லீட்டர் சிறுநீர் கழிக்கப்படுகிறது. மலக் கழிவுகள் கொள்கலன்களில் சேகரிக்கப்பட்டு கீழே கொண்டுவரப்பட்டாலும், பெரும்பாலான சிறுநீர் நேரடியாக கும்பு பனிப்பாறையின் மீதே வெளியேற்றப்படுகிறது. 

மனித உடலில் இருந்து சுமார் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வெளியேறும் இந்த சிறுநீர் பனியை நேரடியாக உருக்குகிறது. இதன்மூலம் மட்டுமே ஒவ்வொரு மலையேற்றக் காலத்திலும் சுமார் 154 டன் பனி உருகுவதாக ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

அடிப்படை முகாமில் மனித செயல்பாடுகளால் ஏற்படும் பனி உருகுதலில் சிறுநீர் கழிப்பு 6 சதவீத பங்களிப்பை அளிக்கும் நிலையில், எஞ்சிய 94 சதவீத பாதிப்பு அங்கு பயன்படுத்தப்படும் எரிபொருட்களால் ஏற்படுகிறது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மலையேறிகளின் சமையல், மின்சாரம் மற்றும் வெப்பத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் மண்ணெண்ணெய், பெட்ரோல் மற்றும் எரிவாயு சிலிண்டர்களில் இருந்து வெளியாகும் ஒட்டுமொத்த வெப்ப ஆற்றலானது ஆண்டுதோறும் சுமார் 2,500 டன் பனியை உருக்குவதற்கு காரணமாகிறது.

1991 முதல் 2023 வரையிலான 32 ஆண்டுகால செயற்கைக்கோள் தரவுகளின்படி, எவரெஸ்ட் அடிப்படை முகாமின் மேற்பரப்பு வெப்பநிலை ஆண்டுக்கு சராசரியாக 0.28 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. இது அருகிலுள்ள பிற பனிப்பாறைப் பகுதிகளை விட இரண்டு மடங்கு கூடுதல் வேகமாகும். 

சூழலியல் ரீதியாக மிகவும் பலவீனமடைந்து வரும் கும்பு பனிப்பாறையைப் பாதுகாக்கும் நோக்கில், எவரெஸ்ட் அடிப்படை முகாமை பனிப்பாறைகள் இல்லாத பாதுகாப்பான பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று ஆய்வாளர்கள், நேபாள அரசுக்குப் பரிந்துரைத்துள்ளனர்.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -