நேபாளம் – திபெத் எல்லையில் திடீர் வெள்ளம்: 95 பேர் பலி; 403 பேர் மாயம்!

நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பனிச்சரிவே இந்த திடீர் வெள்ளத்துக்கு காரணமாக இருக்கலாம் என நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கனால் தெரிவித்துள்ளார்.

நேபாளம் – திபெத் எல்லையில் திடீர் வெள்ளம்: 95 பேர் பலி; 403 பேர் மாயம்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் நேபாளத்தில் குறைந்தது 95 பேர் உயிரிழந்துள்ளதுடன், மொத்தமாக 403 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 265 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பேரிடரில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்திரீகர்களும் மாயமாகியுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

நேபாள சுற்றுலா வாரியத்தின் தகவலின்படி, காணாமல் போன 403 பேரில் 62 பேர் நேபாள நாட்டவர்கள். மேலும், 26 நாடுகளைச் சேர்ந்த 341 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் காணாமல் போயுள்ளனர். இவர்களில் 200 பெண்களும் 203 ஆண்களும் அடங்குகின்றனர்.

காணாமல் போன வெளிநாட்டினரில் இந்தியாவைச் சேர்ந்த 133 பேரும், அமெரிக்காவைச் சேர்ந்த 47 பேரும், இங்கிலாந்தைச் சேர்ந்த 33 பேரும் உள்ளடங்குகின்றனர்.

புனிதப் பயணமாக கைலாஷ் மானசரோவர் நோக்கிச் சென்ற யாத்திரீகர்களே எல்லையோரப் பகுதியில் ஏற்பட்ட இந்தப் பேரிடரால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனம் ஒன்றின் வாடிக்கையாளர்கள் மூன்று பேருந்துகளில் குறித்த பகுதியில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டபோது அவர்கள் தப்பிக்க முயன்ற நிலையில், ஒரு பேருந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட யாத்திரீகர்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. அவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகளில் நேபாள இராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பனிச்சரிவே இந்த திடீர் வெள்ளத்துக்கு காரணமாக இருக்கலாம் என நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கனால் தெரிவித்துள்ளார்.

வெள்ளப்பெருக்கினால் அடித்துச் செல்லப்பட்ட இடிபாடுகள் மோதியதில் திரிசூலி ஆற்றின் குறுக்கே அமைந்திருந்த இரண்டு பாலங்கள் உடைந்து சேதமடைந்துள்ளன. மேலும், குடியிருப்புகள், நீர்மின் நிலையங்கள் மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகளும் கடுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2015ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான நிலநடுக்கத்திற்குப் பின்னர் இடம்பெற்ற மிக மோசமான இயற்கைப் பேரிடராக இது கருதப்படுகிறது.

இந்தப் பேரிடர் தொடர்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள நேபாள பிரதமர் பாலேந்திர ஷா, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக அரசாங்கத்தின் அனைத்து வளங்களும் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இதுவரை 114 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த 93 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, திபெத் பகுதியிலும் பேரிடர் காரணமாக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT