சவுதி விமான நிலையம் மீது தாக்குதல்: ஒருவர் பலி; அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு உத்தரவு
சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள தம்மாம் நகரின் கிங் பஹத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து நேற்று புதன்கிழமை (21) மாலை நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 08 பேர் காயமடைந்துள்ளதாக சவுதி சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.
தாக்குதலில் காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், விமான நிலையக் கட்டடத் தொகுதிக்கு ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் தொடர்பில் விசேட நிபுணர் குழுவொன்றால் தொடர் மதிப்பீடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு தரப்பும் வெளிப்படையாகப் பொறுப்பேற்காத போதிலும், ஏமனில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அண்மைக்காலமாக சவுதி அரேபியாவின் முக்கிய விமான நிலையங்கள் மற்றும் சிவில் உட்கட்டமைப்புகள் மீது தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக தலைநகர் ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட பாரிய தாக்குதலில் 13 பேர் பலியாகியிருந்த நிலையில், பிராந்தியத்தில் உச்சக்கட்ட பதற்றம் நிலவி வரும் சூழலிலேயே தற்போதைய சம்பவமும் பதிவாகியுள்ளது.
புனித நகரங்களான மக்கா மற்றும் மதினா தவிர்ந்த ஏனைய அனைத்து சவுதி விமான நிலையங்களும் தமது ஏவுகணை இலக்கு எல்லைக்குள் காணப்படுவதால் பொதுமக்கள் பயணங்களை முன்னெடுப்பதைத் தவிர்க்குமாறு, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முன்னரே பகிரங்க எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
ஏமனில் சவுதி கூட்டுப் படைகளின் ஆதரவு பெற்ற அரச படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே இடம்பெற்று வரும் உள்நாட்டு மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சவுதி அரேபியாவை இலக்கு வைத்து இவ்வாறான எல்லை தாண்டிய ஏவுகணைத் தாக்குதல்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
சவுதி அரேபியாவில் தீவிரமடைந்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் பிராந்திய பதற்றங்களைக் கருத்தில்கொண்டு, அந்நாட்டிலுள்ள அமெரிக்க தூதரகப் பணியாளர்களையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.