பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இலங்கை! இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்துக்கு 151 நாடுகள் ஆதரவு


பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இலங்கை! இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்துக்கு 151 நாடுகள் ஆதரவு
ADVERTISEMENT
ADVERTISEMENT

கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசங்களில் உள்ள இயற்கை வளங்கள் மீது பாலஸ்தீன மக்களுக்கு இருக்கும் நிரந்தர இறையாண்மையை உறுதிப்படுத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்துக்கு இலங்கை உட்பட 151 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் இரண்டாவது குழுவினால் 2026 நவம்பர் 11ஆம் திகதி இந்தத் தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டது. இதன்போது 151 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாகவும், 7 நாடுகள் எதிராகவும் வாக்களித்ததுடன், 11 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்தத் தீர்மானத்துக்கு அமெரிக்கா, இஸ்ரேல், கொலம்பியா, மைக்ரோனேசியா, நௌரு, பலாவு மற்றும் பராகுவே ஆகிய 07 நாடுகளே எதிர்ப்புத் தெரிவித்து வாக்களித்துள்ளன. அதேவேளை, இந்தியா, சீனா மற்றும் ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட முக்கிய நாடுகளுடன் இணைந்து இலங்கையும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.

கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசத்தில் பாலஸ்தீன மக்களுக்கும், ஆக்கிரமிக்கப்பட்ட சிரிய கோலான் பகுதியில் அரபு மக்களுக்கும் தமது இயற்கை வளங்கள் மீது உள்ள நிரந்தர இறையாண்மை என்ற தலைப்பிலான இத்தீர்மானம், ஆக்கிரமிப்பின் கீழ் வாழும் மக்கள் தமது இயற்கை வளங்களைக் கட்டுப்படுத்தவும் அவற்றிலிருந்து பயனடையவும் உள்ள உரிமைகளை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது. 

மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள நிலம் மற்றும் நீர் வளங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் சுரண்டப்படுவது, சேதப்படுத்தப்படுவது மற்றும் குறைவடைந்து செல்வது குறித்த கரிசனைகளையும் இது ஆராய்கின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஆக்கிரமிப்பு சக்தியான இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் இயற்கை வளங்களைச் சுரண்டும் அல்லது அழிக்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தும் இத்தீர்மானம், அத்தகைய நடவடிக்கைகளால் ஏற்படும் இழப்புகளுக்கு நட்டஈடு கோருவதற்குப் பாலஸ்தீனர்களுக்கு உள்ள உரிமையையும் அங்கீகரிக்கின்றது.

ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களின் நிலைமைகள் குறித்துத் தொடரும் கரிசனைகளுக்கு மத்தியில், பாலஸ்தீனர்களின் பொருளாதார உரிமைகள் மற்றும் இறையாண்மைக்குக் கிடைத்துள்ள பரந்த சர்வதேச ஆதரவை இந்த வாக்கெடுப்பு பிரதிபலிக்கின்றது. பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமைக்கும், இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்குப் பேச்சுவார்த்தை மூலமான இரு-நாடு தீர்வுக்கும் இலங்கை நீண்டகாலமாகத் தனது ஆதரவை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குழு மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தத் தீர்மானம், இறுதிப் பரிசீலனைக்காக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முழுமையான அமர்வுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. 

இத்தீர்மானம் சட்டரீதியாகக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதல்ல. எனினும், பாலஸ்தீன உரிமைகள் மற்றும் இயற்கை வளங்கள் தொடர்பில் ஐ.நா. உறுப்பு நாடுகளின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் அரசியல் ரீதியான முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT