22ஆவது அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூலங்களுக்கு சபாநாயகர் சான்றுரை
அரசியலமைப்புக்கான 22ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூலம் ஆகியவற்றில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு, சான்றுரைப்படுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்கள் இடம்பெற்ற விவாதங்களைத் தொடர்ந்து இவ்விரு சட்டமூலங்களும் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட நிலையில், சபாநாயகரின் சான்றுரையுடன் அவை சட்டங்களாக முறைப்படி அமலுக்கு வருகின்றன.
அரசியலமைப்புக்கான 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு விவாதம், நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பின்னர், அதன் மூன்றாம் மதிப்பீடு திருத்தங்களுடன் மூன்றில் இரண்டு விசேட பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் திருத்தத்தின் மூலம் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 63 இலிருந்து 65ஆகவும் அதிகரிக்கப்படுகிறது.
அத்துடன், அரசியலமைப்பின் 137ஆவது உறுப்புரை திருத்தப்பட்டு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 19 இலிருந்து 24ஆக உயர்த்தப்படவுள்ளது. இதன்மூலம் பிராந்திய மேன்முறையீட்டு நீதிமன்றங்களை நிறுவி, நிலுவையிலுள்ள வழக்குகளை விரைவாக முடிவுக்குக் கொண்டுவரவும், வழக்குகளின் தரப்பினர் கொழும்புக்கு வர வேண்டிய தேவையைக் குறைக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, நீதித்துறை திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்புத் திருத்தங்கள் ஏதுமின்றி 96 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 158 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன. தொடர்ந்து சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இச்சட்டமூலத்திலும் தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியுள்ளார்.
இந்த நீதித்துறை திருத்தச் சட்டத்தின் மூலம் மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 61 இலிருந்து 63 ஆகவும், மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்களின் ஓய்வுபெறும் வயது 60 இலிருந்து 62 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், சட்டமூலத்தின் 4ஆம் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் ஊடாக மேலதிக மாகாண மேல் நீதிமன்றங்களையும் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றங்களையும் நிறுவுவதற்கு ஏதுவாக, அதிகபட்ச மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 110 இலிருந்து 120 ஆக அதிகரிக்கப்படுகிறது. இதன்படி, தித்துறை (திருத்தம்) சட்டமூலம், 2026ஆம் ஆண்டின் 23ஆம் இலக்க நீதித்துறை (திருத்தம்) சட்டமாக அமலுக்கு வருகிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.