ரியாத் சர்வதேச விமான நிலையத்தில் பலத்த வெடிப்பு: பயணிகள் வெளியேற்றம், விமான சேவைகள் ரத்து
சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் பலத்த வெடிப்புச் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து, பயணிகள் அவசரமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு 12க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்துள்ளதாக நேரில் கண்டவர்களும் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். ஏமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள், சவூதி அரேபியா மீதான ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள சூழலில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த வாரத்தில் மாத்திரம் ரியாத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து இருமுறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அந்தத் தாக்குதல்களில் 04 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர்; மேலும் ஒரு விமானமும் கடுமையாகச் சேதமடைந்தது. தற்போதைய வெடிப்புச் சம்பவம் குறித்து சவூதி அரசாங்க ஊடக அலுவலகமோ அல்லது சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையோ உடனடியாக எந்தவோர் உத்தியோகபூர்வ விளக்கத்தையும் வெளியிடவில்லை.
விமானப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் 'Flightradar24' தளத்தின் தரவுகளின்படி, ரியாத்தை நோக்கி வரவிருந்த அனைத்து விமானங்களும் மாற்றுப் பாதைகளுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான நிலைய வான்பரப்பில் ஒரு ஹெலிகாப்டர் மட்டுமே வட்டமிட்டுக் கொண்டிருப்பது பதிவாகியுள்ளது.

பயணிகள் விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன்னர் தங்களின் விமான சேவை நிறுவனங்களைத் தொடர்புகொண்டு பயண நேர உறுதிப்படுத்தலைப் பெற்றுக்கொள்ளுமாறு விமான நிலைய நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
எத்திஹாட் ஏர்வேஸ் மற்றும் கத்தார் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்கள் ரியாத்துக்கான பல விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளதுடன், இந்த ரத்து எதிர்வரும் திங்கட்கிழமை வரை நீடிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏமன் அரசாங்கம், ஹூதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியதைத் தொடர்ந்து, சவூதி வான்வெளியை போர் மண்டலமாக அறிவித்த ஹூதி கிளர்ச்சியாளர்கள், வணிக ரீதியிலான விமானங்கள் சவூதி வான்வெளியைத் தவிர்க்குமாறு எச்சரித்துள்ளனர்.
இதேவேளை, ரியாத்தில் முக்கிய எரிசக்தி மற்றும் முதலீட்டு மாநாடுகள் நடைபெறவுள்ள நிலையில், திட்டமிட்டபடி மாநாடுகள் நடைபெறும் என்றும் பங்கேற்பாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.