துருக்கியில் இரத்தச் சிவப்பு நிறத்தில் ஓடிய கால்வாய் நீர்; ட்ரோன் ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
துருக்கியின் இயற்கை எழில் கொஞ்சும் ரைஸ் மாகாணத்தில் உள்ள கால்வாயொன்றில் திடீரென இரத்தச் சிவப்பு நிறத்தில் நீர் ஓடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 21 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதையடுத்து, சுற்றுச்சூழல் அதிகாரிகள் முன்னெடுத்த ட்ரோன் ஆய்வில் தனியார் தேயிலைத் தொழிற்சாலையொன்றின் கழிவுநீரே இதற்குக் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
போன்டிக் மலைகளுக்கும் கருங்கடலுக்கும் இடையில் அமைந்துள்ள ரைஸ் மாகாணம், துருக்கியில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் பகுதியாகவும், தேயிலைத் தோட்டங்கள், கிவிப்பழ உற்பத்தி மற்றும் மீன்பிடித் தொழிலுக்குப் பெயர் பெற்ற இடமாகவும் திகழ்கிறது. இம்மாகாணத்தின் ஊடாகப் பாயும் தேகிர்மெந்தேரே கால்வாயில் வழமைக்கு மாறாகக் கடும் சிவப்பு நிறத்தில் நீர் கரைபுரண்டு ஓடியதை அவதானித்த பொதுமக்கள், அதனைப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, நீரின் நிறம் மாறியதற்கான காரணத்தைக் கண்டறியத் துருக்கியின் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் ட்ரோன் கமராக்களைப் பயன்படுத்தி நீளமான அந்தக் கால்வாய் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். இதன்போது, அப்பகுதியில் இயங்கி வரும் தனியார் தேயிலைத் தொழிற்சாலை ஒன்றிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் எவ்விதச் சுத்திகரிப்புமின்றி நேரடியாகக் கால்வாயில் கலப்பது உறுதி செய்யப்பட்டது.
சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறி கால்வாயில் கழிவுநீரை வெளியேற்றிய குறித்த தனியார் தொழிற்சாலைக்கு அதிகாரிகள் 8 இலட்சத்து 39 ஆயிரத்து 122 துருக்கி லிரா (சுமார் 15 இலட்சத்து 41 ஆயிரத்து 420 இந்திய ரூபா) அபராதமாக விதித்துள்ளனர். அத்துடன், தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய கழிவுநீரின் மாதிரிகள் மேலதிகப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் மேலதிக விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.