ஐரோப்பிய பல்பொருள் அங்காடிகளின் குளிரூட்டிகள் மீதான சைபர் தாக்குதல் குற்றச்சாட்டை மீண்டும் நிராகரித்தது ஈரான்
பிரான்ஸில் உள்ள பல்பொருள் அங்காடிகளின் குளிரூட்டிகளை இலக்கு வைத்து ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய குழுவொன்று பாரிய சைபர் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஈரான் மீண்டும் நிராகரித்துள்ளது. ஈரானிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இஸ்மாயில் பகாய் இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ளார்.
ஈரானுக்கு எதிராக முன்வைக்கப்படும் எந்தவொரு குற்றச்சாட்டும் புனையப்பட்ட செய்திகள் எனத் தெரிவித்துள்ள பகாய், தாம் மேற்கொள்ள விரும்பும் அல்லது மேற்கொண்ட எந்தவொரு நடவடிக்கையையும் முழுத் துணிச்சலுடன் அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பியத் தரப்பினர் தமது குளிரூட்டிகளில் ஏதேனும் பிரச்சினையை எதிர்கொள்ளும்போது அதனை ஈரான் மீது சுமத்துவதாகக் கூறிய அவர், இத்தகைய குற்றச்சாட்டுகள் ஒரு சதித்திட்டம் எனவும் சாடியுள்ளார்.

கடந்த மாதம் பிரான்ஸில் இடம்பெற்ற குளிரூட்டிகள் தொடர்பான சம்பவத்தைத் தொடர்ந்து, பாரிஸில் உள்ள ஈரானியத் தூதுவரை அழைத்த பிரான்ஸ் அரசாங்கம் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தது. இதனை நாட்டின் நலன்கள் மற்றும் பிரெஞ்சு மக்களின் பாதுகாப்பு மீதான பாரிய தாக்குதல் எனப் பிரான்ஸ் வர்ணித்திருந்தது.
இதற்கிடையில், இம்மாத ஆரம்பத்தில் குறைந்தது ஒன்பது ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்பொருள் அங்காடிகள் மற்றும் உணவு வணிக நிறுவனங்கள் இரண்டாவது கட்ட சைபர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன. எனினும், இத்தாக்குதல்களுக்கு யார் பொறுப்பு என்பது இதுவரை தெளிவாகத் தெரியவரவில்லை.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.