70 சதவீத இ.போ.ச பஸ்களே சேவையில் ஈடுபடக்கூடிய நிலையில் உள்ளன: நாடாளுமன்றத்தில் தகவல்!
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களில் சுமார் 70 சதவீதமான பஸ்கள் மாத்திரமே தற்போது சேவையில் ஈடுபடக்கூடிய தகுதியான நிலையில் உள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன, நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதியமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கை போக்குவரத்துச் சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள 7,130 பஸ்களில் சுமார் 5,000 பஸ்கள் மாத்திரமே தற்போது பொதுப் போக்குவரத்துக்காக பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ் தொகுதியில் 6,987 சாதாரண பஸ்களும், 143 சொகுசு பஸ்களும் உள்ளடங்குகின்ற போதிலும், அவற்றில் 2,000க்கும் மேற்பட்ட பஸ்கள் பழுதடைந்தும் சேவையிலிருந்து ஒதுக்கப்பட்டும் உள்ளதாக பிரதியமைச்சர் விளக்கமளித்தார்.
நாடளாவிய ரீதியில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தனியார் பஸ்களின் மாகாண ரீதியான விவரங்களையும் வெளியிட்ட அவர், மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 5,524 தனியார் பஸ்களும், மத்திய மாகாணத்தில் 2,433 பஸ்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 1,866 பஸ்களும், தென் மாகாணத்தில் 1,326 பஸ்களும், வடமேல் மாகாணத்தில் 1,324 பஸ்களும் சேவையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஊவா மாகாணத்தில் 1,043 தனியார் பஸ்களும், வட மாகாணத்தில் 976 பஸ்களும், கிழக்கு மாகாணத்தில் 520 பஸ்களும், வடமத்திய மாகாணத்தில் 509 பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
அதேவேளை, கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி வரையான காலப்பகுதிக்குள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் 2,966 தனியார் பஸ்களுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் 1,826 சாதாரண சேவை பஸ்களும், 651 சொகுசு பஸ்களும், 257 அரை சொகுசு பஸ்களும், 232 அதி சொகுசு பஸ்களும் அடங்குவதாகவும் பிரதியமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன சபையில் சுட்டிக்காட்டினார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.