நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் இலவச பயிற்சித் திட்டம் அறிவிப்பு
இலங்கையின் பாலர் பருவக் கல்வித்துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் விரிவான இலவச தேசிய மட்டப் பயிற்சித் திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பிரதியமைச்சர் கலாநிதி நாமல் சுதர்ஷன விசேட அறிக்கையொன்றின் ஊடாகத் தெரிவித்துள்ளார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, பாலர் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் மற்றும் தேசிய கல்வி நிறுவகம் (NIE) ஆகியன இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன.
தேசிய முன்பள்ளிக் கொள்கையை நடைமுறைப்படுத்துதல், முன்பள்ளிகளைப் பதிவு செய்தல், கட்டமைப்பு ரீதியான புதிய பாடத்திட்டக் கட்டமைப்பை அறிமுகப்படுத்துதல் மற்றும் ஆசிரியர்களின் தொழில்சார் நிபுணத்துவத் திறன்களை மேம்படுத்துதல் ஆகியன இந்த முயற்சியின் பிரதான நோக்கங்களாக அமைந்துள்ளன.
பல கட்டங்களாக முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ், நாடளாவிய ரீதியிலுள்ள சுமார் 35,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்காக 108 தேசிய மட்ட முதன்மைப் பயிற்றுவிப்பாளர்களும், 556 மாகாண மட்டப் பயிற்றுவிப்பாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளதோடு, ஒவ்வொரு ஆசிரியருக்கும் 10 நாட்கள் கொண்ட முழுமையான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் ஒருங்கிணைப்புடன் முன்னெடுக்கப்படும் இந்த முன்னோடிப் பயிற்சித் திட்டம் தற்போது 8 மாகாணங்களில் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சப்ரகமுவ மாகாணத்தில் எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
மேலும், விசேட தேவையுடைய சிறுவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் உரிய வசதிகளை மேம்படுத்துவதற்கான விசேட ஏற்பாடுகளும் இந்தத் திட்டத்தின் கீழ் வகுக்கப்பட்டு வருவதாக பிரதியமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.