பாகிஸ்தானில் கடும் புகைமூட்டம்: மூச்சுவிடவே சிரமம்... 2 நாட்களில் 3,000 பேர் பாதிப்பு
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடுமையான புகைமூட்டம் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக லாகூர் மற்றும் ராவல்பிண்டி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதுடன், சுவாசக் கோளாறுகளுக்காக மருத்துவ சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராவல்பிண்டி நகரில் இரண்டு நாட்களில் மாத்திரம் சுமார் 3,000 பேர் சுவாசம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளுக்காகச் சிகிச்சை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடுமையான புகைமூட்டம் காரணமாக ராவல்பிண்டியில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக வயதானவர்கள் மற்றும் வெளிப்புறங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் சுவாசக் கோளாறுகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான லாகூரிலும் காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உலகளவில் காற்று மாசுபாடு அதிகமாக உள்ள நகரங்களின் நிகழ்நேரப் பட்டியலில் லாகூர் முதலிடத்தை எட்டியதாக வெளியான தகவல்கள் குறிப்பிடுகின்றன.
நகரின் காற்றுத் தரம் மிகவும் ஆரோக்கியமற்ற நிலையை அடையக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், குறிப்பாக முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் சுவாச நோயாளர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட பருவகாலத்தில் காற்று மாசுபாடு அதிகரிப்பது வழக்கமாகக் காணப்படுகிறது.
குறிப்பாக அறுவடைக்குப் பின்னர் விவசாய நிலங்களில் எஞ்சியுள்ள பயிர்க் கழிவுகளை எரிக்கும் நடவடிக்கைகள் புகைமூட்டம் உருவாவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகின்றன.
இதனுடன் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை மற்றும் ஏனைய மாசு உமிழ்வுகளும் காற்றுத் தரத்தைப் பாதிக்கின்றன.
வளிமண்டலத்தில் காற்றோட்டம் குறைவாக இருக்கும் சந்தர்ப்பங்களில் இத்தகைய மாசுத் துகள்கள் நிலத்திற்கு அருகில் தேங்கி, அடர்த்தியான புகைமூட்டத்தை உருவாக்கக்கூடும்.
அடுத்த சில நாட்களில் போதுமான மழைவீழ்ச்சி பதிவாகாவிட்டால் காற்று மாசுபாடு மேலும் அதிகரிக்கக்கூடும் என வானிலைத் தரப்பினர் எச்சரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மழைவீழ்ச்சி ஏற்படும் போது வளிமண்டலத்தில் காணப்படும் சில மாசுத் துகள்கள் அகற்றப்படுவதால் தற்காலிகமாகக் காற்றின் தரம் மேம்பட வாய்ப்புள்ளது.
எனினும், புகைமூட்டம் உருவாகும் அடிப்படைக் காரணிகள் தொடர்ந்தால் காற்று மாசுபாடு மீண்டும் அதிகரிக்கக்கூடும்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

