அனோஜன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் கைவிடப்பட்டன; இரு வாரங்களில் நாடு திரும்புவார்

சவூதி பொது வழக்குத் தொடுநர் அலுவலகத்தின் இந்த அண்மைய தீர்மானத்தால், எஞ்சியிருந்த சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனோஜன் மீண்டும் இலங்கைக்குத் திரும்புவதற்கான வழிவகை ஏற்பட்டுள்ளது.

அனோஜன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் கைவிடப்பட்டன; இரு வாரங்களில் நாடு திரும்புவார்
ADVERTISEMENT
ADVERTISEMENT

சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனுக்கு எதிரான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் கைவிட சவூதி அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சரின் தகவல்களுக்கு அமைய, குறித்த வழக்கை தொடர்ந்து முன்னெடுப்பதில்லை என சவூதி அரேபியாவின் பொது வழக்குத் தொடுநர் அலுவலகம் 2026 நவம்பர் 9ஆம் திகதி தீர்மானித்துள்ளதன் மூலம், அனோஜன் தனக்கு எதிராக எஞ்சியிருந்த அனைத்து சட்ட நடவடிக்கைகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சவூதி அதிகாரிகளால் ஆட்சேபனைக்குரியதாகக் கருதப்பட்ட பேஸ்புக் பதிவு ஒன்று தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாண மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் 2026 செப்டெம்பர் 17ஆம் திகதி அனோஜனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

எனினும், இராஜதந்திர மற்றும் ஏனைய தலையீடுகளைத் தொடர்ந்து, 2026 ஒக்டோபர் 14ஆம் திகதி சவூதி நீதிமன்றம் அவரது மரணதண்டனையை இரத்துச் செய்திருந்தது. எனினும், ஏனைய தண்டனைகள் அமலில் இருந்தமையால், அவரை முழுமையாக விடுவிப்பதற்கான இராஜதந்திர முயற்சிகளை இலங்கை அதிகாரிகள் தொடர்ச்சியாக முன்னெடுத்திருந்தனர்.

சவூதி பொது வழக்குத் தொடுநர் அலுவலகத்தின் இந்த அண்மைய தீர்மானத்தால், எஞ்சியிருந்த சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனோஜன் மீண்டும் இலங்கைக்குத் திரும்புவதற்கான வழிவகை ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அனோஜனை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் எனத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், அவர் எதிர்வரும் ஒன்று அல்லது இரு வாரங்களுக்குள் இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, அனோஜனின் குடும்ப உறுப்பினர்கள் நேற்று வெளிவிவகார அமைச்சுக்கு விஜயம் செய்து, அவரது விடுதலையை உறுதிப்படுத்துவதில் பங்களிப்புச் செய்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வெளிவிவகார அமைச்சு மற்றும் அனைத்து அரச நிறுவனங்கள், அதிகாரிகளுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வழிகாட்டல், வெளிவிவகார அமைச்சின் இராஜதந்திர தலையீடுகள் மற்றும் ஏனைய அதிகாரிகளின் முயற்சிகளினாலேயே இந்த வெற்றி கிடைத்துள்ளதாக அமைச்சர் ஹேரத் சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்த விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்கிய சவூதி அரேபிய அரசாங்கம், அந்நாட்டு நீதித்துறை, சவூதி மற்றும் இலங்கை இராஜதந்திர அதிகாரிகள் மற்றும் வழக்குக்கு உதவுவதற்காக சவூதி அரேபியாவுக்குச் சென்ற சட்டத்தரணிகள் குழுவினருக்கும் அவர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT