பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சந்தையில் சடுதியாக அதிகரித்த முட்டை விலை
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தற்போது உள்ளூர் சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. அச்சங்கத்தின் செயலாளர் அநுரசிறி மாரிசிங்க குறிப்பிடுகையில், தற்போது சந்தையில் முட்டையொன்று 42 ரூபாய்க்கும் 45 ரூபாய்க்கும் இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.
முட்டை உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளமையும், சந்தையில் முட்டைக்கான கேள்வி உயர்ந்துள்ளமையுமே இந்த விலை அதிகரிப்புக்குப் பிரதான காரணமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதிக மழை காரணமாக ஏற்பட்ட வானிலை மாற்றத்தால், முன்னர் 80 சதவீதமாகக் காணப்பட்ட முட்டை உற்பத்தி, தற்போது 50 முதல் 60 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
மேலும், கடந்த காலங்களில் கோழித் தீவன உற்பத்திக்குத் தேவையான மக்காச்சோளம் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதால் உற்பத்திச் செலவு உயர்வடைந்துள்ளது. இதேவேளை, எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பேக்கரி உற்பத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால், வெதுப்பகங்களுக்கு மேலதிகமாக முட்டைகள் விநியோகிக்கப்படுகின்றன.
இதனால் ஏற்பட்டுள்ள கேள்வி மற்றும் வழங்கலுக்கு இடையிலான மாற்றமே இந்த விலை உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளதே தவிர, இதுவொரு செயற்கையான விலையேற்றம் அல்ல என அநுரசிறி மாரிசிங்க வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தற்போதைய முட்டை விலை அதிகரிப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் வரை நீடிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.