புதிய மற்றும் இரண்டாம் கட்ட பயனாளர்களுக்கான அஸ்வெசும பணம் எப்போது கிடைக்கும்?
புதிய மற்றும் இரண்டாம் கட்ட அஸ்வெசும பயனாளர்களுக்கான நவம்பர் மாத நலன்புரிக் கொடுப்பனவை எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி வழங்க எதிர்பார்த்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை ஏற்றுக்கொள்ளும் காலம் கடந்த நவம்பர் 15 ஆம் திகதியுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, புதிதாக வெளியிடப்பட்டுள்ள தகுதிப் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ள பயனாளர்கள் இன்று (17) முதல் வங்கிக் கணக்குகளைத் திறந்து அவற்றை உறுதிப்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்குத் தேவையான பரிந்துரைக் கடிதங்கள் இன்று முதல் அந்தந்த பிரதேச செயலகங்களில் அமைந்துள்ள நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவுகளின் ஊடாக வழங்கப்படவுள்ளன. வங்கிக் கணக்கைத் திறந்த பின்னர், பயனாளர்கள் மீண்டும் தமது பிரதேச செயலகத்திற்குச் சென்று சமூகப் பாதுகாப்புத் தகவல் பதிவேட்டில் தமது வங்கிக் கணக்கு விபரங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
அத்துடன், பயனாளர்கள் தங்களுக்குச் சொந்தமான ஏனைய வங்கிக் கணக்குகள் தொடர்பான தகவல்களைச் சரிபார்ப்பதற்கு அனுமதியளிக்கும் சத்தியக் கடதாசியொன்றையும் சமர்ப்பிக்க வேண்டும் என நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.
இதன்மூலம், தேவையான சந்தர்ப்பங்களில் பயனாளர்களின் வங்கிக் கணக்கு விபரங்களை உரிய வங்கிகளிடமிருந்து நலன்புரி நன்மைகள் சபை அல்லது சம்பந்தப்பட்ட பிரதேச செயலகம் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். இதற்கான சத்தியக் கடதாசிப் படிவங்களைப் பிரதேச செயலகங்களிலுள்ள நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவுகளில் பெற்றுக்கொள்ள முடியும்.
எவ்வாறாயினும், ஏற்கனவே செயற்பாட்டிலுள்ள அஸ்வெசும வங்கிக் கணக்கைக் கொண்டுள்ள பயனாளர்கள் புதிதாகக் கணக்கொன்றைத் திறக்க வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்படக்கூடிய தாமதங்களைத் தவிர்ப்பதற்காக, தகுதியுடைய பயனாளர்கள் தேவையான வங்கி மற்றும் தகவல் சரிபார்ப்பு நடவடிக்கைகளை உரிய முறையில் விரைந்து நிறைவு செய்யுமாறு நலன்புரி நன்மைகள் சபை கேட்டுக்கொண்டுள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.