இலங்கையில் 300,000 மின் நுகர்வோருக்கு இலவச ஸ்மார்ட் மின்மானிகள்! யாருக்கெல்லாம் கிடைக்கும்?
இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தவும், எரிபொருள் சேமிப்பு மற்றும் விநியோகக் கட்டமைப்புகளை மேம்படுத்தவும், மின்சார விநியோக முறைமையை நவீனமயமாக்கவும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பல்வேறு முக்கிய திட்டங்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வரவு - செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டுக்குத் தேவையான 45 நாட்களுக்குப் போதுமான எரிபொருளைக் களஞ்சியப்படுத்தும் வகையில் சேமிப்புக் கொள்ளளவு விரிவுபடுத்தப்படும் எனக் குறிப்பிட்டார்.
அதன்படி, முத்துராஜவெலவிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வரை விமான எரிபொருள் குழாய்த்தொகுதியை நிர்மாணிப்பதற்கும், 92,000 மெட்ரிக் தொன் கொள்ளளவு கொண்ட எரிபொருள் சேமிப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் 22.34 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எரிபொருள் இறக்கும் நேரத்தை 96 மணித்தியாலங்களிலிருந்து 48 மணித்தியாலங்களாகக் குறைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 16,332 மில்லியன் ரூபா பெறுமதியான கொலன்னாவ - துறைமுகம் குழாய்த்திட்டத்துக்கான கேள்விமனுக்களையும் அரசாங்கம் கோரியுள்ளது. கப்பல் நிறுவனங்களுக்குத் தாமதக் கட்டணமாக நாளொன்றுக்குச் சுமார் 30,000 அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டு வரும் நிலையில், இத்திட்டத்தை 18 மாதங்களுக்குள் பூர்த்தி செய்வதன் மூலம் அந்தச் செலவினங்களைக் குறைக்க எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் 300,000 மின் நுகர்வோருக்கு இலவசமாக ஸ்மார்ட் மின்மானிகள் (Smart meters) வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார். லங்கா மின்சார நிறுவனத்தின் (LECO) 120 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின்மானிகள் வழங்கப்படவுள்ளன.
மேலும், வீட்டுக் கூரைகளில் சூரிய மின்சக்தித் தொகுதிகளைப் பொருத்துவதுடன், மின்கல சேமிப்பு (Battery storage) முறைமைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் நிதிச் சலுகைகளும் வரவு-செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளன. புதிய சூரிய மின்சக்தித் தொகுதிகளைப் பொருத்தும் வீடுகளுக்கு, ஒரு கிலோவாட் மணித்தியால (kWh) மின்கல சேமிப்புக் கொள்ளளவிற்கு 25,000 ரூபாய் வீதம், அதிகபட்சமாக 10 கிலோவாட் மணித்தியாலம் வரை 250,000 ரூபாய் மானியம் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்திற்காக 3,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு முன்மொழியப்பட்டுள்ளதுடன், சூரிய சக்தி சேமிப்பிற்காக இறக்குமதி செய்யப்படும் மின்கலங்கள் மீதான 10 சதவீத துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரியை (PAL) நீக்குவதற்கும் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
எரிசக்திப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், எரிபொருள் விநியோகத் திறனை மேம்படுத்துவதையும், தேசிய மின்கட்டமைப்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை இணைப்பதை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.