லாஃப்ஸ் எரிவாயு விலை உயர்வு எதிரொலி – உணவுகளின் விலையும் உயர்கிறது!
லாஃப்ஸ் எரிவாயு விலை உயர்வை அடுத்து, அந்த எரிவாயுவைப் பயன்படுத்தி இயங்கும் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் சிற்றுண்டிகள், ஃப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து உள்ளிட்ட உணவுகளின் விலைகள் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த விலைத் திருத்தம் குறித்துக் கருத்துத் தெரிவித்த சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான், அதிகரித்து வரும் செலவுகளை ஈடுசெய்யும் நோக்கில், லாஃப்ஸ் எரிவாயுவை நம்பியிருக்கும் உணவகங்களில் சிற்றுண்டிகளின் விலை 5 ரூபாயினாலும், ஃப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகள் தலா 15 ரூபாயினாலும் உயர்த்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தனது விலைகளை உயர்த்தியதைத் தொடர்ந்தே, லாஃப்ஸ் எரிவாயுவைப் பயன்படுத்தும் உணவக உரிமையாளர்களால் இந்த விலை மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய விலைத் திருத்தத்தின் கீழ், 12.5 கிலோகிராம் நிறையுடைய வீட்டுப் பாவனை லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 1,775 ரூபாயினாலும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 732 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.