8 மாதங்களாக முடங்கிய வீதி அபிவிருத்திப் பணிகள்! தார் தட்டுப்பாட்டுக்கு இலங்கையின் புதிய நடவடிக்கை!
நாட்டில் நிலவும் தார் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக மாற்று நாடுகளிலிருந்து தார் இறக்குமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஆர்.எம்.எஸ். பண்டார தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக, ஈரானிலிருந்து இலங்கைக்குத் தார் இறக்குமதி செய்யும் பணிகள் கடந்த மார்ச் மாதம் முதல் பாதிக்கப்பட்டிருந்தன. இதனால் பிரதேச சபை வீதிகள் முதல் அதிவேக நெடுஞ்சாலைகள் வரையிலான சகல அபிவிருத்திப் பணிகளும் சுமார் 8 மாதங்களாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.
இந்த நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில், நாட்டின் காலநிலைக்குப் பொருத்தமான தார் வகைகளைப் பல்வேறு நாடுகளிலிருந்து மாதிரிகளாக வரவழைத்து, அவற்றில் பொருத்தமானவற்றை இறக்குமதி செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதன்மூலம் பாதிக்கப்பட்டுள்ள வீதி அபிவிருத்திப் பணிகளை எதிர்வரும் சில மாதங்களுக்குள் மீள ஆரம்பிக்க முடியும் என எதிர்பார்ப்பதாகவும் ஆர்.எம்.எஸ். பண்டார மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, 'டித்வா' அனர்த்தத்தால் சேதமடைந்த நாட்டின் நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள் மற்றும் பாலங்களின் புனரமைப்புப் பணிகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆசிரி கருணாவர்தன, 'டித்வா' அனர்த்தத்தினால் சேதமடைந்த A மற்றும் B தரத்திலான சுமார் 490 வீதிகள் தொடர்ந்தும் புனரமைக்கப்பட வேண்டியுள்ளதாகவும், அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய இலங்கை ரயில்வே திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் பிரியந்த தீகல, 'டித்வா' அனர்த்தத்தால் சேதமடைந்த அனைத்துப் ரயில் பாதைகளினதும் புனரமைப்புப் பணிகளை எதிர்வரும் ஆண்டுக்குள் நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்தார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.