மதில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு
பலாங்கொடை, பங்கியாவத்த பகுதியில் மதில் சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 7 வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சோகச் சம்பவம் இன்று (21) பதிவாகியுள்ளது.
வீட்டின் முன்பாகத் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மதில் சுவருக்கு அருகில் இன்று பிற்பகல் 1.15 மணியளவில் குறித்த சிறுவன் நின்றுகொண்டிருந்த போதே, எதிர்பாராத விதமாக அம்மதில் சுவர் இடிந்து சிறுவன் மீது வீழ்ந்துள்ளது.
மதில் சுவரின் இடிபாடுகளுக்குள் சிறுவன் சிக்குண்டிருப்பதை அவதானித்த சிறுவனின் தாயார், உடனடியாக அயலவர்களின் உதவியுடன் சிறுவனை மீட்டுள்ளார். மீட்கப்பட்ட சிறுவன் துரிதமாக ஓட்டோ ஒன்றின் மூலம் பலாங்கொடை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்த சிறுவனின் சடலம், தற்போது பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சடலம் மீதான பிரேத பரிசோதனை நாளை நடைபெறவுள்ளது. இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.