கமு/ கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை; 125ஆவது ஜூவிலி ஆண்டு பிரகடனம்

125ஆவது ஆண்டை சிறப்பிக்கும் முகமாக பாடசாலை சார் அனைவரையும் சந்திப்பதே எமது நோக்கம் என பாடசாலையின் அதிபர் ரெஜினோல்ட் தெரிவித்தார்.

ஒக்டோபர் 1, 2024 - 14:38
கமு/ கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை; 125ஆவது ஜூவிலி ஆண்டு பிரகடனம்

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் 125ஆவது ஆண்டு கல்வி சேவையை 2025ஆம் ஆண்டு நிறைவு செய்ய உள்ள நிலையில், இந்த வருடம் அக்டோபர் 13ஆம் திகதி முதல் 2025ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் திகதி வரையான ஆண்டை ஜூவிலி ஆண்டாக பிரகடனப்படுத்தி, பல செயற்றிட்டங்களை செய்ய உள்ளதாக பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் ரெஜினோல்ட் தெரிவித்தார்.

பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்விடயத்தை அவர் தெளிவுப்படுத்தினார்.

இவ்வாண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக 45 அங்கதவர்களை கொண்ட ஜூவிலி குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. பாடசாலையின் முகாமைத்துவ குழு உறுப்பினர்கள், பாடசாலை சங்க அபிவிருத்தி நிறைவேற்றிக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் சங்க நிறைவேற்றிக் குழு உறுப்பினர்கள் என இணைந்து குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, பிரித்தானியாவில் உள்ள பழைய மாணவர்கள் சங்கத் தலைவர்கள் உட்பட இந்தக் குழுவில்  தலைவர், செயலாளர், பொருளாளர், உப தலைவர்கள், நிர்வாக உறுப்பினர்கள் என இயங்கவுள்ளது. மேலும், செயற்றிட்டங்களுக்காக ஆறு உப குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

1900ஆம் ஆண்டு இருதய ஆண்டவர் ஆலய இருப்பிடத்தில் சென் மேரிஸ் என்ற பெயரில் கத்தோலிக்க யேசு சபை உறுப்பினர்களால் சிறிய மாணவர்களையும் சிறிய வளங்களையும் கொண்டு ஆரம்பிக்கப்பட்டு வழிநடத்தப்பட்டு வந்தது. 1928ஆம் ஆண்டு கார்மேல் சபை அருட் சகோதரர்களால் பெண்களுக்கு என கார்மேல்ல் சபை ஆரம்பித்தார்கள். 1938ஆம் ஆண்டு சூசையப்பர் சபையினால் ஆண்கள் பிரிவு உருவாக்கப்பட்டது. பின்னர் அக்கால தேவை கருதி, 1976 ஆம் ஆண்டு இவ்விரு பகுதிகளும் இணைக்கப்பட்டு, ஒரே நிர்வாகத்தின் கீழ் இன்று வரை செயற்பட்டு வருகின்றது.

துறவற சமய தலைவர்களால் உருவாக்கப்பட்டு வழிநடத்தப்பட்டு வந்த இந்தப் பாடசாலை அருட் சகோதரர்களால் இன்று வரை வழிநடத்தப்பட்டு வருகின்றது. தற்போது இப்பாடசாலையில் 4000ற்கும் மேற்பட்ட மாணவர்களும் 250 க்கும் மேற்பட்ட கல்வி சாரா ஊழியர்களும் உள்ளதோடு, இறை நம்பிக்கையுடன் பல செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், 125ஆவது ஆண்டை சிறப்பிக்கும் முகமாக பாடசாலை சார் அனைவரையும் சந்திப்பதே எமது நோக்கம் என பாடசாலையின் அதிபர் ரெஜினோல்ட் இதன்போது தெரிவித்தார்.

மேலும், இமாதம் 13ஆம் திகதி வைப்பவரீதியாக ஆரம்ப நிகழ்வை நடத்த இருப்பதாகவும் அத்தோடு, பாடல் வெளியீடும் இடம்பெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த ஊடக சந்திப்பின் போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

(கஜனா)

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!