கழிப்பறை குழியில் விழுந்து எட்டு வயது சிறுவன் பலி
புதிதாக கட்டப்பட்ட வீட்டுக்கு கழிப்பறை ஒன்றை கட்டுவதற்காக அவரது தந்தையால் குழி ஒன்று தோண்டப்பட்டுள்ளது.

பொகவந்தலாவை - கிவ் தோட்டபகுதியில் வீடொன்றின் அருகில் இருந்த ஆறு அடி ஆழமுள்ள கழிப்பறை குழியில் விழுந்து எட்டு வயது சிறுவன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த சிறுவன், தரம் 3இல் கல்வி கற்கும் ஹெலோன் சாசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
புதிதாக கட்டப்பட்ட வீட்டுக்கு கழிப்பறை ஒன்றை கட்டுவதற்காக அவரது தந்தையால் குழி ஒன்று தோண்டப்பட்டுள்ளது. இந்நிலையில், மழைநீர் தேங்கி இருந்த அந்தக் குழியில் சிறுவன் வழுக்கி விழுந்துள்ளார்.
சிறுவனை நீண்ட நேரம் காணாத தந்தை அவனைத் தேட ஆரம்பித்துள்ளார். இதன்போது, மாலை 5 மணியளவில், குழிக்கு அருகில் தனது மகனின் காலணிகள் இருப்பதைக் கண்டுள்ளார். குழியில் பார்த்தபோது, தனது மகன் நீரில் மூழ்கி இருப்பதைக் கண்டு உடனடியாக அக்கம்பக்கத்தினரின் உதவியை நாடி சிறுவனை வெளியே எடுத்துள்ளார்.
சிறுவனை உடனடியாக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, சிறுவன் கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
உடல் பிரேத பரிசோதனைக்கு டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதோடு, பொகவந்தலாவை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)