பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து கவலைகளை ஏற்படுத்தியுள்ள துப்பாக்கிச்சூடு!

இன்று காலை இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய கணேமுல்ல சஞ்சீவ உயிரிழந்துள்ளார்.

பெப்ரவரி 19, 2025 - 16:17
பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து கவலைகளை ஏற்படுத்தியுள்ள துப்பாக்கிச்சூடு!

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணி வேடமணிந்த துப்பாக்கிதாரி துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, பாதுகாப்பு குறைபாடு தொடர்பில் கவலை எழுப்பப்பட்டுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய கணேமுல்ல சஞ்சீவ உயிரிழந்துள்ளார்.

சட்டத்தரணி போல் வேடமணிந்த சந்தேக நபர், சட்டத்தரணிகளின் மேஜையில் அமர்ந்திருந்து, கணேமுல்ல சஞ்சீவ தனது தடுப்புக்காவல் நிலை தொடர்பான விசாரணைக்காக நீதிமன்றக் கூண்டுக்குள் நுழைந்தபோது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
அதனையடுத்து, தாக்குதல் நடத்தியவர் உடனடியாக சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவத்தில் கடுமையான காயங்களுக்கு ஆளான கணேமுல்ல சஞ்சீவ, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம், நாட்டின் மிகவும் பலத்த பாதுகாப்புடன் கூடிய நீதித்துறை வளாகங்களில் ஒன்றான புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது குறித்து கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சந்தேக நபரைக் கண்டுபிடித்து கைது செய்ய பொலிஸார் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.

2023 ​​செப்டம்பர் 13 ஆம் திகதி  கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ, ஆரம்பத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பூசா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!