நேபாளத்தில் டிக்டாக் செயலிக்கு அதிரடி தடை
சமீபகாலமாக இந்தச் செயலியின் வாயிலாக பல்வேறு மதத்தினர் இடையே வெறுப்புணர்வு துாண்டும் வகையில் வீடியோக்கள் பதிவிட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சீனாவை தலைமையிடமாக வைத்து இயங்கும், 'பைட் டான்ஸ்' என்ற நிறுவனம், டிக்டாக் என்ற சமூக வலைதள செயலியை உருவாக்கி உள்ளது. இது, உலகம் முழுதும் மக்களிடையே வரவேற்பை பெற்றது.
எனினும், இந்த செயலியின் வாயிலாக நாட்டின் பாதுகாப்புக்கும், தனிப்பட்ட நபர்களின் தரவுகளுக்கும் உரிய பாதுகாப்பு இன்மை இருப்பதாக கூறி இந்தியா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன.
இந்நிலையில் நேபாளத்திலும், டிக்டாக் செயலிக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
சமீபகாலமாக இந்தச் செயலியின் வாயிலாக பல்வேறு மதத்தினர் இடையே வெறுப்புணர்வு துாண்டும் வகையில் வீடியோக்கள் பதிவிட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதன் காரணமாக சமூக நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் செயல்கள் அதிகரித்துள்ளதாக, அந்நாட்டு அரசு கண்டறிந்துள்ளது.
இதையடுத்து, பிரதமர் புஷ்ப கமல் பிரசண்டா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் ஒலிபரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சக செய்திதொடர்பாளர் ரேகா சர்மா கூறுகையில், ''டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க அனைத்து பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. எனினும், அதற்கான காலக்கெடு எதுவும் வரையறுக்கப்படவில்லை,'' என்றார்.