அமெரிக்க வரி: அரசாங்கத்துக்கு ரணில் வைத்துள்ள மற்றுமொரு கோரிக்கை
அமெரிக்க வரி விதிப்பு தொடர்பில் இலங்கைக்கு பல பிரச்சினைகள் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மூன்று மாதங்களுக்கு வரி விதிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒத்திவைத்துள்ள போதிலும், அமெரிக்க வரி விதிப்பு தொடர்பில் இலங்கைக்கு பல பிரச்சினைகள் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இதனை ஒரு அவசர விடயமாக கருதி, இது தொடர்பில் அதிகாரிகள் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறித்து நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, வரி விதிப்பு தற்போது பிற்போடப்பட்ட போதிலும், அதற்கான காலம் முடிவடையும்போது அது நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளதுடன், இலங்கை 25% – 30% வரை வரிகளை செலுத்தினால் அது பாரிய பிரச்சினை எனவும் சுட்டிக்காட்டினார்.
"இதனால், சுமார் 100,000 பேர் வேலை இழக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். இது இலங்கையின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த பிரச்சினையை நாம் எதிர்கொள்ள வேண்டும்" என்று ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
ட்ரம்பின் அறிவிப்பினை வரிகள் நீக்கப்பட்டதாக இலங்கை கருத முடியாது எனவும், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஏனைய நாடுகளுடன் பிரச்சினைக்கு தீர்வுகாண பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.