'பதவி விலகல் குறித்து சுமந்திரனின் கருத்தை சம்பந்தன் தவறாக எடுக்கமாட்டார்'

எம்.பி. பதவியிலிருந்து சம்பந்தன் விலக வேண்டுமென்ற விடயத்தைச் சொல்லியிருந்தார். சுமந்திரன் சொன்னது உண்மையானதுதான். 

ஒக்டோபர் 28, 2023 - 15:53
'பதவி விலகல் குறித்து சுமந்திரனின் கருத்தை சம்பந்தன் தவறாக எடுக்கமாட்டார்'

பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து சம்பந்தனை விலக வேண்டும் என்று சுமந்திரன் எம்.பி. சொல்லியுள்ளதை சம்பந்தன் தவறாக எடுக்கமாட்டார் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "சம்பந்தனின் அரசியல் அனுபவம் தொடர்பில் அனைவருக்குமே தெரியும். அவர் ஒரு தெளிவான அரசியல்வாதி. ஆனால், வயது மூப்பின் காரணமாக அவரால் முன்னரைப் போன்று செயற்பட முடியவில்லை.

திருகோணமலை மாவட்டத்தில் மக்கள் தங்கள் பிரதிநிதி தொடர்பில் தேடுகின்றதுடன் தங்களுக்காக ஒருவர் களத்தில் இருக்க வேண்டும் என்று கோரியிருக்கின்ற நிலைமை உள்ளது.

இவ்வாறான நிலைமையில்தான் சுமந்திரன் எம்.பி. கடந்த சில தினங்களுக்கு முன்னர்  ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி வழங்கியிருந்தார்.

அதன்போது எம்.பி. பதவியிலிருந்து சம்பந்தன் விலக வேண்டுமென்ற விடயத்தைச் சொல்லியிருந்தார். சுமந்திரன் சொன்னது உண்மையானதுதான். 

ஆனால், சுமந்திரன் நினைத்திருந்தால் பொய் சொல்லியிருக்கலாம். உண்மையைச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே அவர் இதனைக் கூறினார்.

சுமந்திரனின் உண்மையான இந்தக் கருத்து தொடர்பில் கட்சியின் அடுத்து வரும் கூட்டங்களில் கூட ஆராயப்படலாம். ஆனால், சுமந்திரனின் இந்தக் கருத்தைச் சம்பந்தன் தவறாக எடுக்க மாட்டார் என்றே நினைக்கின்றேன்” என தெரிவித்தார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!